Published : 28 Jun 2019 08:05 AM
Last Updated : 28 Jun 2019 08:05 AM

சென்னையில் இன்று ஸ்டாலினுடன் தங்க தமிழ்ச்செல்வன் சந்திப்பு

அமமுக கொள்கைபரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்ப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதால் அவர் திமுகவில் சேர உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் இன்று சந்திக்க உள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கும், கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கை நழுவிய குக்கர் சின்னம், தேர்தல் தோல்வி, எம்எல்ஏ பதவியை இழந்தது என்று அடுத்தடுத்த பாதிப்பு தங்க தமிழ்ச்செல்வனின் நிலைப்பாட்டை மாற்றி உள்ளது. மேலும் தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் சில நாட்களுக்கு முன்பு கடுமையாகத் தாக்கிப் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இருதரப்பிலும் பேச்சுவார்த்தை, சமாதானம் இல்லை என்ற நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய முயற்சி செய்தார். இதற்காக அவர் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்பில் இருந்தார். ஆனால் அவரை அதிமுகவில் சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்ட அதிமுகவினர் இவரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றினர்.

அதிமுகவில் சேருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையில் தற்போது திமுகவில் சேர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக செந்தில்பாலாஜி மூலம் திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அழைப்பின்பேரில் அவரது ஆதரவாளர்கள் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து ஆதரவாளர்கள் கூறுகையில், அதிமுகவில் சேர தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது திமுகவில் இணைய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் எதையும் வெளிப்படையாக கூற முடியாது. உறுதியான பிறகே விவரம் தெரியவரும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x