Published : 28 Jun 2019 03:31 PM
Last Updated : 28 Jun 2019 03:31 PM

திமுகவை விட்டால் தமிழர்களுக்கு நாதியில்லை: தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தது குறித்து நாஞ்சில் சம்பத்

திமுகவை விட்டால் தமிழர்களுக்கு நாதியில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இணைந்தது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏவாகவும் அமமுக நிர்வாகியாகவும் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து மூத்த அரசியல்வாதியும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், தனியார் தொலைக்காட்சியிடம்  கூறும்போது, ''தங்க தமிழ்ச்செல்வனுக்கு எனது வாழ்த்துகள்.

தமிழை நேசிப்பவர்களும் திராவிடத்தை நேசிப்பவர்களும் திமுகவைத் தழுவ வேண்டியது காலத்தின் கட்டாயம். திராவிட இயக்கத்துக்கு அறைகூவல் விடுக்கிற இக்காலத்தில், அண்ணாவை இழந்துவிட்டு நிற்கிற, டிடிவி தினகரனை விட்டு விலகி வந்தது சமயோசிதமான முடிவு.

தங்க தமிழ்ச்செல்வன் ஸ்டாலினின் தலைமையில் தொடர்ந்து இயங்கி, தேனி மாவட்ட அரசியலில் தவிர்க்கமுடியாத இடத்தை எட்டுவதற்கான வாய்ப்பும் சூழலும் உள்ளது. அதிமுகவில் இருந்துவிட்டு தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு வந்ததில் எந்த நெருடலும் இல்லை. கள அரசியலில் இருந்தவர்களால் ஓய்வு பெறவே முடியாது. இந்த முடிவு, அவருக்கும் நல்லது; திமுகவுக்கும் நல்லது.

அமமுகவில் எதற்கு இருக்கிறோம் என்று இருப்பவர்களுக்கே தெரியாது. அரசியலில் எண்ணிக்கைதான் முக்கியம். தங்க தமிழ்ச்செல்வனால் திமுகவுக்கும் ஆதாயம்தான்.

அதிமுக பாஜகவின் கிளைக்கட்சி. வருங்காலத்தில் அக்கட்சி இருக்கவே போவதில்லை. இதனால்தான் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு வந்திருக்கிறார். திமுகவை விட்டால் தமிழர்களுக்கு நாதியில்லை. எல்லாப் பிரச்சினைகளையும் திமுகதான் கையில் எடுத்துக்கொண்டு போராடுகிறது. கூடங்குளம் அணுக்கழிவு பிரச்சினையில் இருந்து ஹைட்ரோகார்பன், மும்மொழிக் கொள்கை வரை திமுகதான் போராட்டத்தை முன்னெடுக்கிறது.

ஆகவே தமிழர்கள் எல்லோரும் திமுகவைத்தான் கொண்டாடவேண்டும்'' என்றார் நாஞ்சில் சம்பத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x