Published : 28 Sep 2014 09:41 AM
Last Updated : 28 Sep 2014 09:41 AM

தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் வன்முறை; பேருந்துகள் நிறுத்தம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதி மன்றத்தில் நேற்று தீர்ப்பு வெளி யானது. இதையடுத்து அதிமுக வினர் மாநிலம் முழுவதும் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருச்சி, தஞ்சையில்..

திருச்சியில் மரக்கடை எம்ஜிஆர் சிலை, மேலரண் சாலையில் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன், முதல்வரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலரண் சாலை, கலைஞர் அறிவாலயம் பகுதிகளில் கல்வீச்சில் ஈடுபட்டனர். கலைஞர் அறிவாலயம் பகுதியில் திமுகவினரும் கல்வீச்சில் ஈடுபட்டதில் அதிமுக தொண் டர் ஒருவரின் மண்டை உடைந் தது. திமுகவினர் இருவர் காய மடைந்தனர். கலவரத்தை கட்டுப் படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். தென்னூர் அண்ணா நகர் பகுதியில் அரசுப் பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பல் வேறு பகுதிகளில் கருணாநிதி உருவபொம்மையை எரித்தனர்.

தஞ்சாவூரில் மாவட்ட திமுக அலுவலகத்தை தாக்க அதிமுக வினர் முயன்றதால் பரபரப்பு ஏற் பட்டது. திருவாரூரில் எர்ணாகுளம் விரைவு ரயில் மற்றும் மன்னார்குடி பயணிகள் ரயில் ஆகியவற்றை அதிமுகவினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் நாகூர் அருகே ஒரு சொகுசு கார் தீ வைத்து எரிக்கப் பட்டது. வேதாரண்யத்தில் திமுக கொடிக்கம்பங்கள் சாய்க்கப் பட்டன. காரைக்கால் பேருந்து நிலையத்தில் மறியல் முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டது. பல இடங்களில் கடைகள் மீது கற்கள் வீசப்பட்டன. மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பல இடங்களில் கருணாநிதி யின் உருவ பொம்மைகள் எரிக்கப் பட்டன. புதுக்கோட்டையில் மாவட்ட தேமுதிக, திமுக அலுவலகங் கள் மீது அதிமுகவினர் கல்வீச்சு நடத்தினர்.

சேலத்தில் பஸ் கண்ணாடி உடைப்பு

சேலம் செவ்வாய்ப்பேட்டை, சின்னக்கடை வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், அக்ரஹாரம், பஜார் வீதி, அம்மா பேட்டை, அஸ்தம்பட்டி என மாநகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் முன் திரண்டிருந்த அதிமுகவினர் தொலைக்காட்சி மூலம் சொத்து குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பை அறிந்து, அங்குள்ள சுவர்களில் வரையப்பட்டிருந்த திமுக கட்சி சின்னத்தை அழித்தனர். அங்கிருந்த திமுக கட்சிக் கொடி கம்பத்தை உடைத்து அகற்றினர்.

சேலம் மாவட்டம் தலைவாசல், இடைப்பாடி, ஓமலூர் ஆகிய இடங்களில் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்தனர்.

இடைப்பாடியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த அதி முகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் அம்மாபேட்டையில் மாநகராட்சி 41வது வார்டு அதிமுக செயலாளர் கோழி அன்பழகன் தலைமையில் தொண்டர்கள், சாலையில் குப்பைத் தொட்டியை தள்ளி வந்து போக்குவரத்தை மறித்தனர். அந்த வழியாக பயணி களை ஏற்றிச் சென்ற ஆட்டோவை மறித்து கண்ணாடியை உடைத் தனர். கடையில் இருந்த மண் ணெண்ணெய் கேனை எடுத்து வந்து கட்சித் தொண்டர் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது, கேனை பறித்து அவரை அப்புறப்படுத்தினர்.

பட்டைக்கோவில் முதல் அம்மா பேட்டை காந்தி மைதானம் வரையி லான கடைகளை அடைக்கும்படி ரகளை செய்தனர். பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தம், கடையடைப்பு, அதிமுகவினரின் மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி நாகர்கோவில், திருவனந்தபுரம் - நாகர்கோவில், திருநெல்வேலி மதுரை, தூத்துக் குடி மதுரை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் முடங்கின. பயணி கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட மைசூர் ரயில் முன் அமர்ந்து அதிமுக-வினர் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். நாகர்கோவில் அருகே நாவல்காடு கிராமத்தில் பழமையான ஆலமரத்தை வெட்டி, சாலையில் போட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தினர். திருவனந்தபுரம் இருந்து நாகர்கோவில், புனலூரில் இருந்து தென்காசி வரும் கேரள மாநில பஸ்கள் நேற்று மதியத்துக்கு மேல் தமிழக எல்லைக்குள் வரவில்லை.

கடைகள் அடைப்பு

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து நகரங் களிலும் கடைகள் அடைக்கப் பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. வேலூர் மாநகராட்சி அலு வலகம் முன்பு திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. வேலூரில் மேயர் கார்த்தியாயினி, அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசு ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. குடியாத் தத்தில் பிற கட்சியினரின் பேனர்களை அதிமுகவினர் கிழித் தெறிந்தனர்.

ஆற்காடு அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. சென்னை யில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற ரயிலை காட்பாடி ரயில் நிலையத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசங்கரன் தலைமையில் அதிமுகவினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில்..

உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, குபேர்பஜார் உள்ளிட்ட இடங்களில் கடைகள், பெட்ரோல் பங்குகள் மற்றும் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.

அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில் முதலியார் பேட் டையில் கடலூர்-புதுச்சேரி சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும், திமுக தலைவர் கருணாநிதி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இதே போல் மரப்பாலம் சிக்னல் அருகில் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, 250க்கும் மேற்பட்டோரை முதலியார்பேட்டை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் அண்ணா சாலையில் அதிமுக பொருளாளர் பாஸ்கர் தலைமையில் மறியல் செய்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப் பட்டதால் வெளியூர் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் பயணிகளுக்கும், நடத்துநர் களுக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x