Published : 24 Sep 2014 11:17 am

Updated : 24 Sep 2014 11:17 am

 

Published : 24 Sep 2014 11:17 AM
Last Updated : 24 Sep 2014 11:17 AM

நஞ்சிலிருந்து மீட்கப்படும் அமிர்தம்

அந்தக் குடுவைக்குள் பொன்னிறத் திரவம் நிறைந்திருந்தது. அதன் அடியில் தேங்கி நிற்கும் குருணைப் படலம். சுவை பார்த்த கையில் சில மணி நேரம் நீடிக்கும் நெய்யின் முறுகிய மணம்.

``வட இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாட்டு பசுக்களின் பாலில் இருந்து உற்பத்தி செய்யட்ட நெய் இது. இதில் செயற்கையான நிறமூட்டிகள் மணமூட்டிகள், பதனப்பொருட்கள் என எதுவும் சேர்க்கப்படவில்லை’’ என்கிறார் அரியா (ARIA) பால் பண்ணையின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான அஹ்மத். அப்படி இந்த மாடுகளில் என்ன சிறப்பு உள்ளது எனக் கேட்டதற்கு நீண்ட விளக்கம் அளித்தார்.


``பொதுவாக நமது நாட்டில் நாம் அருந்தும் பாலில் 60 சதவீதம் வரை ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி போன்ற பல இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் ஆகும். இந்த இறக்குமதி இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலில் புரதத் துணுக்கு (A1 beta-casein) இயற்கையான பாரம்பரிய மரபணுவைக் கொண்டது அல்ல. இது பிறழ்ந்த மரபணுவைக் கொண்டதாகும் .

இந்தப் பாலை அருந்தும்போது நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்திலும் நாளமில்லா சுரப்பிகளிலும் நோய் தடுப்பு மண்டலத்திலும் பல உபாதைகள் ஏற்படுகின்றன. தமனியில் படலம் படிதல், தமனி அடைப்பு, இதய நோய், மனச்சிதைவு, மதி இறுக்கம், முதல் நிலை வகை நீரிழிவு போன்ற நோய்களையும், குழந்தை இறப்பையும் அத்துடன் மனித உடல் இயற்கையாகவே பெற்றுள்ள நோய் எதிர்ப்பு திறனில் குறைபாட்டையும் ஏற்படுத்து கின்றன. பசுவின் பாலுக்கு அமிர்தம் என்ற பெயருண்டு. அமிர்தத்திற்கு நஞ்சு போக்கும் பொருள் எனவும் பொருளுண்டு. ஆனால் நாம் அமிர்தம் என்ற பெயரில் நஞ்சை அருந்துகின்றோம்.

பிரச்சினைக்குரிய இந்த ஏ1 பிறழ்வு புரதம் இந்திய மண்ணுக்கே உரிய நாட்டு மாடுகளில் இருப்பதில்லை. மாறாக எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஏ2 இணை மரபணு புரதம் மட்டுமே காணப்படுகின்றது. எனவேதான் எங்கள் பண்ணையில் உள் நாட்டு பசுவை மட்டும் வளர்க்கின்றோம். வட இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட 80 கறவை மாடுகள் உள்பட மொத்தம் 196 உயர் ரக மாடுகள் தற்போது எங்களிடம் உள்ளன. அவைகளுக்கு ஹார்மோன்கள் உட்பட எந்தவிதமான ஊக்க மருந்து ஊசிகளும் போடப்படுவதில்லை.

மாடுகளுக்கு நெல்லின் உமி, தவிடு, வைக்கோல், கோது மையின் உமி, தவிடு, கோ 4, வேலி மசாலா, சோளத்தட்டை, சோள மாவு, அகத்திக்கீரை, கடலைப் பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை பிண்ணாக்கு போன்ற இயற்கையான நல்ல தீவனங்களை கொடுப்பதன் வழியாக மட்டுமே பாலின் தரத்தை நாங்கள் மேம் படுத்துகின்றோம்.

எங்கள் பண்ணையில் கிடைக் கும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.65-க்கு மேல் விற்பனை ஆகும் வகையில் பெரும் சந்தை வாய்ப்பு உள்ளது. பாலை அப்படியே விற்பனை செய்யாமல், நெய் போன்ற பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்போது விவசாயிகள் இன்னும் அதிக லாபம் பெறலாம். ஒரு சராசரி நாட்டு மாட்டின் விலை ரூ.35,000. உயர் ரக நாட்டு மாட்டின் விலை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை ஆகிறது, என்கிறார்’’ அஹ்மத்.

திண்டிவனம் நகரின் அண்மையில் ஜி.எஸ்.டி, சாலை அருகே அமைந்துள்ள கீழ் பசார் கிராமத்தில் இவரின் ஒருங்கிணைந்த விவசாய பால் பண்ணை அமைந்துள்ளது . 200 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ள இந்த பண்ணையை 2011-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகின்றார். மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்திலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் கட்டமைப்பையும் தனது பண்ணையில் நிறுவி வருகின்றார்.

மீதமுள்ள ஏக்கரில் மாட்டுத் தீவனம், மேஞ்சியம் வெட்டு மரம், நெல்லி, மா, பப்பாளி, சாத்துக்குடி, நாவல், கொய்யா, சப்போட்டா, நாரத்தை, பம்பளிமாஸ் போன்ற வற்றை இயற்கை முறையில் பயிரிட்டுள்ளார். அஹ்மத் வைர வணிகம் செய்து வரும் குடும்ப பின்னணியைக் கொண்டவர். ஐ.டி. நிறுவனம், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த இவர், தற்போது இயற்கை வேளாண்மை மற்றும் பால் பண்ணை தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறும்போது, ``முதலில் முழுக்க முழுக்க லாப நோக்கத்தில்தான் இந்த இயற்கை வேளாண்மையை தேர்ந்தெடுத்தேன். ஆனால் அது தொடர்பான ஆய்வில் ஈடுபடும் போது இயற்கை வேளாண்மை என்பது வணிகம் என்பதையும் தாண்டியது என்பது புரிந்தது. அது ஒரு தற்சார்பான நீடித்த தன்மை கொண்ட முழுமையான வாழ்க்கை முறையாக எழுச்சி கொண்டு என்னை கவர்ந்து கொண்டது’’ என்றார்.

இவர் ஒரு ஒளிப்படக்கலைஞரும் கூட. வாழ்க்கையின் முழுமை பற்றிய புரிதலையும் கலையுணர்வையும் உழைப்பையும் ஒன்று குவிக்கும் இவரது முயற்சிகள் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை யாக அழகிய வடிவம் பெற்று, பல விவசாயிகளுக்கு வழிகாட்டு வதாகத் திகழ்கிறது. மேலும் விவரங்களுக்கு 98841 66253 என்ற எண்ணிலும், ahmad@ariafarms.inஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

வட இந்தியா பசுக்கள்நெய் உற்பத்திசெயற்கை நிறமூட்டிகள்அரியாARIAபால் பண்ணைஅஹ்மத்பால் புரதத் துணுக்கு

You May Like

More From This Category

More From this Author