Published : 11 Sep 2018 05:27 PM
Last Updated : 11 Sep 2018 05:27 PM

ராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்ட 7 பேரை பயங்கரவாதிகள் என்பதா?- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் 302-வது பிரிவின் கீழ்தான் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களைப் பயங்கரவாதிகள் என திசை திருப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலையில் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது.

ஏழு பேர் விடுதலையை தாங்கள் ஆட்சேபிக்கவில்லை என ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ள நிலையில் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் தனது கண்டனத்தைப் பதிவு செய்து விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கிற பயங்கரவாதிகளை விடுதலை செய்யக் கூடாது என காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா கூறியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் திட்டவட்டமான தெளிவான தீர்ப்பினை 1999ஆம் ஆண்டு வழங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டமான தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது செல்லாது. இந்தக் கொலை பயங்கரவாத செயல் அல்ல எனக் கூறி தூக்கு தண்டனை விதிக்கப்பெற்றிருந்த 19 பேரைக் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது. மற்றும் 7 பேருக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-ல்தான் தண்டனை அளிக்கப்பட்டது.

எனவே, அரசியல் சட்ட அமைப்புப் பிரிவு 161 மற்றும் 72-ன்கீழ் இவர்களின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும்படி பரிந்துரை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு. ஆனாலும் திரும்பத் திரும்ப பயங்கரவாதிகள் எனக் கூறுவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத போக்காகும்.

7 பேர் விடுதலையில் 06-09-2018 உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பின்பற்றியே தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யவேண்டும் என ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்த உண்மைகளை அடியோடு மறைத்துப் பயங்கரவாதிகளை விடுதலை செய்யக் கூடாது எனக் கூறுவது திட்டமிட்ட திசை திருப்பும் போக்காகும்'' என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x