Published : 01 Sep 2018 08:05 AM
Last Updated : 01 Sep 2018 08:05 AM

நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வதற்கு ரூ.2.80 லட்சம் செலுத்தி மனைவிக்காக 143 இருக்கைகளையும் பதிவு செய்து தேனிலவு கொண்டாடிய இங்கிலாந்து பொறியாளர்

தேனிலவு கொண்டாட்டத்துக்காக நீல கிரி மலை ரயிலில் அனைத்து இருக்கை களையும் (தம்பதிக்கு மட்டும்) பதிவு செய்து, பயணத்தை மனைவிக்குப் பரிசளித்தார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் கிரஹம் லின் (30).

போலந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சில்வியா பிலாசிக் (27) என்பவரை இரு வாரங்களுக்கு முன்பு கிரஹம் லின் காதல் திருமணம் செய்தார். தேனிலவை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற முடிவு செய்த அவர், உலகப் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் பயணத்தை தேர்வு செய்தார். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) மூலமாக செயல்படுத்தப்படும் நீலகிரி மலை ரயில் தனிப் பயணம் குறித்து அறிந்துகொண்டார். நீலகிரி மலை ரயிலின் 3 பெட்டிகளில் மொத்தமுள்ள 143 இருக்கைகளையும் இரு மாதங்களுக்கு முன்பு ரூ.2.80 லட்சம் அளித்து முன் பதிவு செய்தார்.

அதன்படி, நேற்று (ஆக.31) பயணம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தேனிலவைக் கொண்டாட 15 தினங்களுக்கு முன்பு, தம்பதி கிரஹம் லின், சில்வியா பிலாசிக் ஆகியோர் விமானம் மூலமாக டெல்லி வந்தனர். டெல்லி, ஆக்ரா ஜெய்ப்பூர் ஆகிய இடங்களைப் பார்த்த பின்னர், ரயில் மூலமாக சென்னை வந்தனர்.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு இருவரும் மலை ரயிலில் ஏறி குன்னூர் வழியாக மாலை 3 மணிக்கு உதகை வந்தடைந்தனர். குன்னூர் மற்றும் உதகை ரயில் நிலையங்களில் புதுமணத் தம்பதிக்கு ரயில்வே ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிகாட்டியாக ஐஆர்சிடிசி சுற்றுலா அலுவலர் சசிதர் உடன் வந்தார்.

இதுதொடர்பாக கிரஹம் லின் கூறும்போது, ‘ஐரோப்பாவை போல, நீலகிரி மாவட்டத்தின் புவியியல் அமைப்பு உள்ளது. ஒரு முறை போலந்து நாட்டிலுள்ள வோல்ஸ்டன் நகருக்குச் சென்றபோது, நீராவி இன்ஜினில் ஓடும் ரயிலில் பயணம் செய்தேன். அப்போதுதான், சில்வியாவை பார்த்து காதல் கொண்டேன். இந்தியாவின் பெருமைகளை அறிந்து இங்கு வந் தோம். மலைகள், மரங்கள், தேயிலைத் தோட்டங்கள் என இயற்கைக் காட்சிகள் ஐரோப்பிய நாடுகளைபோல காணப்படுகி றது. இதுபோன்ற அழகை வேறு நாடுகளில் பார்த்ததில்லை. மலை ரயில் பயணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. இங்கு உபசரிப்பு சிறப்பாக உள்ளது. இவ்வளவு அழகான இந்தியாவுக்கு வந்தது பெருமையாக உள்ளது. இந்தியாவை நேசிக்கிறோம். மூன்று நாட்கள் உதகையில் தங்க உள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x