Published : 10 Sep 2018 02:02 PM
Last Updated : 10 Sep 2018 02:02 PM

ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை: மயிலாப்பூரில் பட்டப்பகலில் இளைஞரைத் தாக்கி செயின், செல்போன் பறிப்பு

சென்னையில் இதுவரை பெண்களை மட்டுமே தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் சாலையில் சென்ற இளைஞரைத் தாக்கி செயின், செல்போன்களைப் பறித்துச் சென்றுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் வசிப்பவர் கியான்சந்த் (25). இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மதியம் கோயிலுக்குச் சென்று தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கியான்சந்தின் 3 சவரன் செயினைப் பறித்துள்ளனர். இதில் சாலையில் நிலை தடுமாறி கியான்சந்த் கீழே விழுந்துள்ளார். அப்போது செயினைப் பறிக்க விடாமல் பிடித்ததில் பாதி செயின் கியான்சந்தின் கையிலேயே இருந்துள்ளது.

கீழே நிலைதடுமாறி விழுந்த கியான்சந்த் எழுவதற்குள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி வந்த வழிப்பறி நபர்கள் அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனைப் பறித்தனர். அவர் போராடவே, தாக்கித் தள்ளிவிட்டு பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து கியான்சந்த் அளித்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தினர். கியான்சந்திடமிருந்து பாதி செயினை மீட்ட போலீஸார் அவரிடம் செயின் பறிப்பு நடந்த இடத்தில் சோதனையிட்டபோது மீதி பாதி செயின் கிடந்ததைக் கைப்பற்றினர்.

கியான்சந்த் இறுக்கிப் பிடித்ததால் பாதி செயின் அவர் வசம் சிக்கியது. மீதி செயின் கீழே விழுந்ததைப் பதற்றத்தில் வழிப்பறி நபர்கள் கவனிக்கவில்லை. ஆகவே செயின்தான் கிடைக்கவில்லை செல்போனையாவது பறிப்போம் என்று பறித்துச் சென்றுள்ளனர்.

செல்போனைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பெண்களிடம் மட்டுமே நேரடியாக மோதி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் தற்போது ஆண்களையும் தாக்கி வழிப்பறியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x