Published : 22 Sep 2018 08:46 AM
Last Updated : 22 Sep 2018 08:46 AM

ஜனவரி ஜெஇஇ நுழைவுத்தேர்வுக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர ஜெஇஇ நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இது ஜெஇஇ மெயின், ஜெஇஇ அட்வான்ஸ்டு என இரு தேர்வுகளை உள்ளடக்கியது. ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வெழுதலாம்.

என்ஜடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர ஜெஇஇ மெயின் தேர்வு மதிப்பெண் போதும். ஆனால், ஐஐடி-யில் சேர வேண்டுமானால் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர் வெழுத வேண்டும். கடந்த ஆண்டு வரையில் ஜெஇஇ நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்தது.

ஆனால், நடப்பு கல்வி ஆண்டு (2018-19) முதல் தேசிய தேர்வு முகமை என்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய அமைப்பு ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் மட்டுமின்றி நீட், யுஜிசி நெட் உட்பட தேசிய அளவிலான பல்வேறு தேர்வுகளை நடத்த இருக்கிறது.

அந்த வகையில், தேசிய தேர்வு முகமை, இந்த கல்வி ஆண்டு இரு ஜெஇஇ மெயின் தேர்வை நடத்துகிறது. முதல் தேர்வு வரும் ஜனவரி மாதத்திலும், 2-வது தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்படும். தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஏதேனும் ஒரு தேர்வை எழுதினால் போதும். எனினும் விருப்பப்பட்டால் இரு தேர்வுகளையும் எழுதலாம். அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அது ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான தகுதிக்கு கருத்தில்கொள்ளப்படும்.

இந்த நிலையில், ஜனவரி 6 முதல் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளன. ஜெஇஇ மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. தேர்வெழுத விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை (www.nta.ac.in) பயன்படுத்தி செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட முழு தகவல் களும் இந்த இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத ஜெஇஇ மெயின் தேர்வானது ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு தனியே பின்னர் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x