Published : 05 Sep 2018 08:30 AM
Last Updated : 05 Sep 2018 08:30 AM

கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கும் அளவுக்கு தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும்: மாவட்டத் தலைவர்களுக்கு மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் வேண்டுகோள்

கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்கும் அளவுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று மேலிடப் பொறுப் பாளர் சஞ்சய் தத் கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற் காக அக்கட்சியின் தேசியச் செயலா ளரும், மேலிடப் பொறுப்பாளரு மான சஞ்சய் தத், தமிழகம் வந்துள்ளார். 12 நாட்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ள அவர், முதல்கட்டமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்க ளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ண சாமி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 3.30 மணி வரை நடந்தது.

மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். தமிழகத்தில் யாரை தலைவராக நியமித்தாலும், கோஷ்டிப் பூசல் வந்துவிடுகிறது. இதனால் கட்சி வளர்ச்சி தடைபடுகிறது என்று பலரும் புகார் தெரிவித்தனர்.

நிறைவாக சஞ்சய் தத் பேசியதாவது:

2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தாவிட்டால் காங்கிரஸுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும். பெரிய மாநிலமான தமிழகத்தில் 2004 தேர்தல் போல 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெல்ல வேண்டும்.

காங்கிரஸ் கிராம அளவில் பலமிக்க கட்சியாக இருந்தால்தான் கூட்டணியில் அதிக இடங்களை கேட்க முடியும். எனவே, கீழ்மட்ட அளவில் கட்சியை பலப்படுத்த மாவட்டத் தலைவர்கள் உழைக்க வேண்டும். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் உழைக்க வேண்டும்.

இவ்வாறு சஞ்சய் தத் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடு முழுவதும் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்க உள்ளோம். மாநில அளவில் பேரணி நடத்தி ஆளுநர்களிடமும், டெல்லியில் குடியரசுத் தலைவரிடமும் மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும் காங்கிரஸ் போராடும்’’ என்றார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல், மத்திய, மாநில அரசுகளை வீழ்த்த சூளுரை ஏற்பது, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.திருநாவுக்கரசர் - ஈவிகேஎஸ்

ஆதரவாளர்கள் மோதல், கல்வீச்சு

கூட்டத்தின் தொடக்கத்தில் திருநாவுக்கரசர் பேசும்போது, ‘‘மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் தவிர. மற்றவர்கள் வெளியே சென்றுவிடுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். இதனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் - திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சஞ்சய் தத், திருநாவுக்கரசர் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

அரங்கின் வெளியிலும் மோதல் தொடர்ந்தது. சரமாரியாக கற்கள் வீசப்பட்டதில் சிலர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, வெளியே வந்த திருநாவுக்கரசர் அவர்களை சமாதானப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x