Published : 14 Sep 2018 05:45 PM
Last Updated : 14 Sep 2018 05:45 PM

இன்னும் 3 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது; நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

 தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் நிலக்கரி இருப்பு மிகவும் குறைந்துள்ளது. தமிழ்நாடு மின் உறுபத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில், இன்னும் 3 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அதன்படி, ஒருநாளுக்கு 20 ரேக்ஸ் நிலக்கரி தினமும் வரவு இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்திற்கு சராசரியாக 7 முதல் 8 ரேக்ஸ் நிலக்கரியே பெற்று வருகிறோம். இந்நிலையில், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரமும் செப்டம்பர் பாதியில் நிறுத்தப்பட்டு விடும் என்பதால் இச்சூழ்நிலை குறித்த முன் நடவடிக்கை தேவைப்படுகிறது. உடனடியாக நிலக்கரி பற்றாக்குறை சரிசெய்யப்படாவிட்டால், சில அனல்மின் நிலையங்களை மூட வேண்டி வரும். அதன் காரணமாக மாநிலத்தில் மின் தடை ஏற்படும்.

அதனால், நிலக்கரித் துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சக அதிகாரிகள் மூலம் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒருநாளுக்கு கிடைக்குமாறு உறுதி செய்ய வேண்டும்'' என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x