

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குளம் (தனி) ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வி சில மாதங்களுக்கு முன் இறந்தார்.
செங்குளம், முருகனேரி ஆகிய கிராமங்கள் இந்த ஊராட்சியின் கீழ் உள்ளன. எனவே, காலியாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு முருகனேரி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியின் மாமனார் சின்னச்சாமி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தேமுதிக கிளைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 1,235 பேருக்கான வாக்குப் பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இதில் 883 வாக்குகள் பதிவாயின.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் 12 செல்லாத வாக்குகள்போக மீதமுள்ள வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் சின்னச்சாமி 435 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரமேஷ் 436 வாக்குகள் பெற்றார்.
ஒரு வாக்கு அதிகம் பெற்றதால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மீண்டும் நடந்த வாக்கு எண்ணிக்கையிலும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ரமேஷ் வென்றார்.