Published : 12 Sep 2014 10:24 AM
Last Updated : 12 Sep 2014 10:24 AM

ஆஸி.யிலிருந்து மீண்டும் தமிழகம் வந்த நூற்றாண்டு பெருமை வாய்ந்த சிலைகள்: 15-ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு ஆஸ்திரேலிய அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நூற்றாண்டு பெருமை வாய்ந்த சிலைகள் மீண்டும் தமிழகம் கொண்டுவரப்பட்டன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அருங்காட்சியகம் நடத்தி வருபவர் சுபாஷ் சந்திரகபூர் (63). இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழக கோயில்களில் இருந்து திருடப்படும் நூற்றாண்டு பெருமை வாய்ந்த சிலைகளை சுபாஷ் சந்திர கபூர் திருட்டுத்தனமாக வாங்கி, அவற்றை தனது அருங்காட்சியகம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு உலகம் முழுவதும் விற்பனை செய்திருக்கிறார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகில் உள்ள சுத்த மல்லி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயி லில் கடந்த 2008-ம் ஆண்டு சுப்ர மணியர், வள்ளி ஆறுமுகம், சிவகாமி, நடராஜர், சோமாஸ் கந்தர், சுந்தரமூர்த்தி, பரமசிவன் உட்பட 20 சாமி சிலைகள், விக்கிரமங்கலம் பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்து 6 ஐம்பொன் சிலைகள் திருடுபோனது. இதே போல விருத்தாச்சலம் விருதகிரீஸ் வரர் கோயிலில் இருந்து பழமையான அர்த்தநாரீஸ்வரர் கல் சிலையும் திருடப்பட்டது.

சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் திருடப்பட்ட சிலைகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் மியூசியங்களில் இருப்பது தெரியவந்தது. சுபாஷ் சந்திரகபூர் தனது அருங்காட்சியகம் மூலம் பலகோடி ரூபாய்க்கு இந்த சிலைகளை விற்பனை செய்திருப்பதும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து ஜெர்மனியில் பதுங்கி இருந்த சுபாஷ் கபூரை இன்டர்போல் போலீஸார் கைது செய்து 2012-ம் ஆண்டு தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் அவரால் விற்பனை செய்யப்பட்ட சிலைகளை கொடுப் பதற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் அருங்காட்சியகங்கள் மறுத்துவிட்டன. அதைத் தொடர்ந்து அங்கிருக்கும் சிலைகளை மீண்டும் தமிழகம் கொண்டு வருதற்கு தமிழக போலீஸார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள நேஷனல் கேலரியில் இருந்த ரூ.33 கோடி மதிப்புள்ள ஐம்பொன் நடராஜர் சிலை, சிட்னி நியூ சவுத் வேல்ஸ் ஆர்ட் அகாடமியில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள கல்லால் ஆன அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆகியவை மீண்டும் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இரண்டு நாள் பயணமாக கடந்த 5-ம் தேதி இந்தியா வந்தார். அப்போது தமிழகத்தில் திருடப் பட்டு ஆஸ்திரேலிய அருங்காட்சி யகங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகளும் தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி, சிலைகளை அவரிடம் ஒப்படைத்தார். அந்த சிலைகள் விமானம் மூலம் வியாழக் கிழமை காலையில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு கொண்டுவரப்பட்டன. அந்த சிலைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிலை திருட்டு தொடர்பான வழக்கு ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் நடந்து வருவதால், வருகிற 15-ம் தேதி இரு சிலைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x