

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியை 6 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் கடந்த 10-ம் தேதி பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்செல்வராசனிடம் 7 நாட்களுக்கு விசாரணை நடத்த அனுமதி கொடுக்கும்படி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மோனி தலைமையில் நேற்று நடந்தது. முடிவில் அருண்செல்வராசனை போலீஸ் காவலில் 6 நாட்களுக்கு விசாரிக்க அனுமதி கொடுத்து நீதிபதி உத்தரவிட்டார். அருண் செல்வராசனிடம் இன்று மதியம் 12 மணி முதல் 23-ம் தேதி மாலை வரை 6 நாட்களுக்கு விசாரணை நடக்கவுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் அருண்செல்வராசனுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பிலும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோனி, "இந்த விசாரணையை நடத்த வேண்டியதற்கான அவசி யம் என்ன? என்ப 0து குறித்து 10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்யுங்கள்" என்று சிபிஐக்கு உத்தரவிட்டுவிட்டு அவர்களின் மனுவை திருப்பி அனுப்பினார்.