Published : 08 Sep 2018 09:34 AM
Last Updated : 08 Sep 2018 09:34 AM

அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றினால் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?- சட்ட நிபுணர்கள் கருத்து

ராஜீவ் கொலை வழக்கில் சிறை யில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந் துரைத்தால் அதை கண்டிப்பாக ஆளுநர் ஏற்றுக்கொண்டு விடுதலை செய்ய வேண்டும். இதற்கு அவ ருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதைத்தாண்டி அவர் இந்த விஷ யத்தில் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்க வேண்டிய அவசியமில்லை என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே இதுதொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி தீர் மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு பரிந்துரைத்தால், இந்த 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக அவரால் என்ன முடிவு எடுக்க முடியும் என்பது தொடர்பாக சட்ட நிபுணர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்: இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161(1)ன்படி இந்த 7 பேரை யும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதை அவர் சட்டப்படியாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வேளை அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அதுகுறித்து அவர் கேள்வி எழுப்பி தீர்மானிக்கலாம். அதைத் தவிர்த்து அவர் அந்த பரிந்துரையை நிராகரிக்க சட்டத்தில் இடமில்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமும் ஆளுநருக்கு இல்லை. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டிய சாவி தமிழக அரசின் கையில்தான் உள்ளது.

மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம்: அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161(1)ன்படி தமிழக அரசுக்கென சில தனிப்பட்ட அதிகாரங்கள் உண்டு என்றாலும், ஆளுநருக்கென்றும் பிரத்யேக அதிகாரங்கள் உள்ளன. தமிழக அமைச்சரவை கூடி பரிந்துரைத் தாலும், இந்த 7 பேரையும் விடு தலை செய்வதா அல்லது வேண் டாமா என்பது குறித்து முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் ஆளுந ரிடம்தான் உள்ளது. அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்பதால் அவர் இது குறித்து மத்திய அரசிடம் ஒப்புதல் கோரவும் செய்யலாம். அவ்வாறு ஒப்புதல் கோரக்கூடாது எனக் கூறுவதற்கு சட்டத்தில் இடமில்லை. இந்த விஷயத்தில் மீண்டும் பந்து மத்திய அரசின் கைக்கே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மூத்த வழக்கறிஞர் சுதா ராம லிங்கம்: முதலில் மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற முறை யில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மனதார வரவேற் கிறேன். இந்த உத்தரவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது. அமைச்சரவை கூடி இந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுந ருக்கு பரிந்துரைத்தால் அந்த பரிந்துரையில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதை சரிசெய்யுமாறு ஆளுநர் அதை மீண்டும் அரசுக்கே அனுப்பி வைக்கலாம். அந்த தவறு களை சரிசெய்த பிறகு அமைச் சரவை மீண்டும் அதே தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதன்பிறகு அவர் அதை கண்டிப்பாக நிராகரிக்க முடியாது. அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரம் ஆளுநருக்கா அல்லது அரசுக்கா என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகம் உள்ளது. எனவே 7 பேரையும் விடுதலை செய்யக்கூறி தமிழக அரசு பரிந்துரைத்தால் அதை ஆளுநர் கண்டிப்பாக நிறைவேற்றித்தான் ஆகவேண்டும்.

பேரறிவாளன் தரப்பு வழக் கறிஞர் கே.சிவக்குமார்: நாங் கள் ஏற்கெனவே இந்த விஷயத் தில் தமிழக அரசுக்கு உள்ள அரசி யலமைப்பு சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினோம். 27 ஆண்டுகள் அவர்கள் சிறைவாசத்தை அனுப வித்துள்ளனர். ஒருவர் 8 ஆண்டு களுக்கு மேல் சிறையில் இருக்கக் கூடாது. அவ்வாறு சிறையில் இருந்தால் சிறை விதிகள்தான் சரியில்லை என்பது நீதியரசர் கிருஷ்ணய்யரின் கூற்று. இந்த 7 பேர் மீதும் இத்தனை ஆண்டுகளில் சிறையில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது. குறிப்பாக 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென ராகுல் காந்தியே வலியுறுத்தி வருகிறார். எனவே தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றும். அதை ஆளுநரும் ஏற்று முழுமனதுடன், அதை விடக் குறிப்பாக மனிதாபிமான அடிப்படையில் அனைவரையும் வெகு விரைவில் விடுதலை செய்து உத்தரவிடுவார் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறோம்.

7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x