Published : 10 Sep 2014 11:08 AM
Last Updated : 10 Sep 2014 11:08 AM

சீன சாக்லேட்டுகளை சாப்பிட்ட 16 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சீன தயாரிப்பு சாக்லேட்டுகளை சாப்பிட்ட பள்ளி மாணவ - மாணவியர் 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காளையார்கோவில் ஒன்றியம், காஞ்சிப்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 33 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம்போல மாணவ - மாணவியர் பள்ளிக்கு வந்தனர். உள்ளூரைச் சேர்ந்த அந்தோணி என்பவர் மகன் டிசோ இந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கிறார். இவரது அத்தை சாந்திக்குக் குழந்தை பிறந்துள்ளதால், அத்தையின் கணவர் ஆரோக்கியசாமி சீனாவில் இருந்து ஒயிட் ரேபிட் எனும் சீன தயாரிப்பு சாக்லேட்டுகளை அனுப்பி வைத்துள்ளார். இதனை வீட்டில் இருந்து எடுத்து வந்த மாணவன் டிசோ, சக நண்பர்களுக்கு அந்த சாக்லேட்டுகளை கொடுத்துள்ளார். சாக்லேட்டுகளை ஆவலாக வாங்கிச் சாப்பிட்ட 16 மாணவ-மாணவியரும் சிறிது நேரத்திலேயே வயிற்றுவலியால் துடித்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

தகவல் அறிந்த கிராமத்தினர் பதறித் துடித்து பள்ளிக்கு விரைந்தனர். 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தும் வர தாமதமானதால், மோட்டார் சைக்கிள்கள், வாடகை கார்களில் மாணவர்களை ஏற்றிச் சென்று, காளையார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே மாணவ மாணவியர் 16 பேருக்கும் மருத்துக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x