Published : 08 Sep 2018 04:30 PM
Last Updated : 08 Sep 2018 04:30 PM

நுங்கம்பாக்கம், மாம்பலம் ரயில் நிலையங்களில் தொடர் வழிப்பறி: பயணிகளிடம் கத்திமுனையில் செல்போன், பணம் பறிப்பு

சென்னையில்,  நுங்கம்பாக்கம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நேற்று இரவு ஐ.டி ஊழியரிடமும் மற்றொரு பயணியிடமும் பணம் , செல்போன் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை கத்திமுனையில் மூன்று பேர் கும்பல் வழிப்பறி செய்தது.

சென்னை அமைந்தகரையை அடுத்த ஷெனாய் நகரில் வசிப்பவர் சக்திவேல் (24). இவர் ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். தினமும் பணி முடித்து ரயில் மூலம் வீடு திரும்புவது வழக்கம்.

வழக்கம்போல் நேற்றிரவும் பணி முடிந்து ரயிலில் வந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்துள்ளார். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கியுள்ளது. பின்னர் அவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டிய அக்கும்பல் அவரிடமிருந்த செல்போன், பணம் ரூ.500 மற்றும் ஏடிம் கார்டை பிடுங்கிச் சென்றது.

போகும்போது அவரிடம் ஏடிஎம் கார்டு பின் நம்பரையும் கேட்டு வாங்கிச் சென்றனர். ரயில்வே பிளாட்பாரம் அருகிலேயே வழிப்பறி நடந்ததால் இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பின்னர் அதே கும்பல் ரயிலில் ஏறிச்சென்றுள்ளனர். மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி மாறன் என்ற பயணியிடம் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து மாம்பலம் ரயில்வே போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியுள்ளதாக போலீஸார் கருதுகின்றனர்.

சிலமாதங்களுக்கு முன்னர் இதேபோன்று தனது நண்பனின் அக்கா திருமணத்திற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய மாணவன் ஒருவனிடம் செல்போனை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டுபேர், கத்தியால் குத்தி மாணவனை கொலை செய்தனர். தற்போது மீண்டும் நுங்கம்பாக்கத்தில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x