Published : 04 Sep 2018 09:34 AM
Last Updated : 04 Sep 2018 09:34 AM

இந்துசமய அறநிலையத் துறையில் 500 செயல் அலுவலர் பணியிடங்கள் காலி: வசூல் பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

மு.யுவராஜ்

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையில் 500 செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் வாடகை, குத்தகை நிலுவை தொகைகளை வசூலிக்கும் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் 38,646 கோயில்கள், திரு மடங்கள், திருமடக் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில், விவசாய நிலங்களில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 குத்தகைதாரர்கள் பயிர் செய்து வருகின்றனர். கோயில்களுக்கு சொந்தமான லட்சக்கணக்கான வீடுகள், கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

கோயில்களின் சொத்துகளை பராமரிப்பது, வாடகை, குத்தகை நிலுவை தொகையை வசூலிப்பது உள்ளிட்ட பணிகளை செயல் அலு வலர்கள்தான் கவனிக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 500 செயல் அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு செயல் அலுவலர் 30 கோயில்கள் வரை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மட்டுமின்றி, பணியில் புதிதாக சேர்ந்த செயல் அலுவலர்கள் பலரும் பணிச்சுமை காரணமாக ராஜினாமா கடிதம் அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில், அறநிலையத் துறைக்கு சொந்தமான வீடு, கடை, குத்தகை நிலங்களில் ரூ.800 கோடி நிலுவை தொகை கடந்த பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்த பணிகளை எவ் வாறு மேற்கொள்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

துறையில் இருக்கும் காலி இடங்கள் எண்ணிக்கையை, குறிப் பிட்ட கால இடைவெளியில் டிஎன்பிஎஸ்சி-யிடம் முறையாக தெரிவித்து வருகிறோம். டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்திதான் செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆனால் விதிப்படி, குறிப்பிட்ட பணியிடங்களை மட்டுமே தேர்வு நடத்தி நிரப்ப முடியும் என்று டிஎன்பிஎஸ்சி கூறுகிறது. அப்படி இல்லாமல், விரைந்து தேர்வு நடத்தி காலி பணியிடங்களை நிரப்புமாறு கேட்டுள்ளோம்.

தற்போது உள்ள செயல் அலுவலர்களைக் கொண்டு கோயில் சொத்துகளை சிறப்பாகவே நிர்வகிக்கிறோம், அதில், எந்த பிரச்சினையும் இல்லை. வாடகை, குத்தகை நிலுவை தொகையையும் விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x