Published : 06 Sep 2018 11:37 AM
Last Updated : 06 Sep 2018 11:37 AM

குட்கா ஊழல் வழக்கில் 2 இடைத் தரகர்கள் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் இன்று இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, குட்கா முறைகேட்டில் தரகர்களாகச் செயல்பட்டதாகக் கூறி இரண்டு பேரை இன்று சிபிஐ கைது செய்துள்ளது .

கைது செய்யப்பட்ட இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவர்களின் வாக்குமூலங்கள் மூலம் பல்வேறு நபர்கள் குறித்த ரகசியத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக குட்கா முறைகேடு குறித்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதில் முறையாக விசாரணை நடக்காததால் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 26 அன்று குட்கா முறைகேட்டை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சிபிஐ, குட்கா விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து தமிழகம், புதுச்சேரியில் அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று (புதன்கிழமை) சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.

 சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள், மற்றும் பிற அரசு ஊழியர்கள், விற்பனை வரித்துறை அதிகாரிகள், சுங்க மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள், உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாக முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வீட்டில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் சிபிஐ இடைத்தரகர்கள் இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த விரிவான விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x