Published : 18 Sep 2018 01:41 PM
Last Updated : 18 Sep 2018 01:41 PM

மத்தியில் மதவாத ஆட்சியும், தமிழகத்தில் ஊழல் ஆட்சியும் அழிய வேண்டும்: சேலம் ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

மத்தியில் மதவாத ஆட்சியும், தமிழகத்தில் ஊழல் ஆட்சியும் அழிய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த 8-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில், “அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகளைக் கண்டித்தும், ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (செவ்வாய்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் தலைமை வகித்தனர். அதன்படி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“தலைவரான பிறகு நான் கலந்துகொள்ளும் முதல் போராட்டம் இது. சேலம் போராட்டக் களத்தை விருப்பப்பட்டு தேர்வு செய்தேன். மத்தியில் நடைபெறுவது மதவாத ஆட்சி. மாநிலத்தில் நடைபெறுவது அதற்கு துணைபோகும் ஊழல் ஆட்சி. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி ஒழிந்தாக வேண்டும். தமிழகத்திலுள்ள அடிமை ஆட்சி அழிந்தாக வேண்டும். தேர்தல் வரும் வரை இந்த ஆட்சி இருக்கும் என கருத வேண்டாம். அதற்கு முன்பே இந்த ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்ற உணர்வு மக்களுக்கு உள்ளது. பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மேலும், முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்தும் ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் கண்டித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x