Published : 11 Sep 2018 12:31 PM
Last Updated : 11 Sep 2018 12:31 PM

‘நான் சிபிஐ இன்டர்போல் ஆபீஸர்’; அபிராமபுரம் போலீஸாரை மிரளவைத்த போலி ஐபிஎஸ் கைது: சுழல் விளக்கு காரும் பறிமுதல்

போலீஸ் சுழல் விளக்குப் பொருத்திய வாகனத்தில் அபிராமபுரம் ஸ்டேஷனுக்குள் வந்து இன்ஸ்பெக்டரை மிரட்டி சிபிஐ இன்டர்போல் ஆபிஸர் என்று பந்தா காட்டிய நபரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் வசிப்பவர் ஜீனத்பேகம் (35). இவரது கணவர் முஹம்மது ஃபாருக். இவர்களுக்கு 19 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. திருமணமாகி 5 ஆண்டுகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது ஃபாருக் மரணமடைந்தார். இவரின் பூர்வீகச் சொத்து அபிராமபுரம் கேசவபெருமாள்புரத்தில் உள்ளது.

இந்த வீடு முஹம்மது ஃபாரூக் அவரது தம்பி ராஜாமுகமதுவுக்கு இரு பிரிவாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மேல்தளம் ராஜாமுகமதுவுக்கும், கீழ்தளம் முஹம்மது ஃபாரூக்கிற்கும் சொந்தமானது.

கணவரின் மறைவுக்குப் பின் சில ஆண்டுகள் சென்னையில் வசித்த ஜீனத்பேகம் சிங்கப்பூர் சென்று அங்கு வசிக்க ஆரம்பித்துவிட்டார். எப்போதாவது சென்னை வந்தால் அபிராமபுரத்தில் உள்ள தனது வீட்டில் தங்குவார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஜீனத் இந்தியா வராமல் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஜீனத்தின் மைத்துனர் ராஜாமுகமது தனது இரண்டாவது மனைவி சஹானாவை கீழ் தளத்தில் ஜீனத்துக்குச் சொந்தமான வீட்டில் தங்க வைத்துள்ளார்.

கடந்த மாதம் ஜீனத் இந்தியா வந்தார். தனது வீட்டுக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அவரது வீடு திறந்திருந்ததும் அதில் ஒரு பெண் இருப்பதையும் பார்த்த அவர், யார் நீ என்று கேட்க அந்தப்பெண் நீ யார் என்று திருப்பிக் கேட்டுள்ளார். நான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரி என ஜீனத் சொல்ல, இது என் கணவர் ராஜாமுகமதுவுக்குச் சொந்தமானது எதுவாக இருந்தாலும், நீ அவரிடம் பேசிக்கொள் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து ஜீனத் தனது வீட்டை மீட்டுத்தரக் கோரி அபிராமபுரம் போலீஸில் கடந்த ஆகஸ்ட் 25 அன்று புகார் அளிக்க, போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று ஜீனத் மறுபடியும் வீட்டுக்குச் செல்ல சஹானாவுக்கும், ஜீனத்துக்கும் தகராறு ஏற்பட ஜீனத் 100-க்கு போன் செய்துள்ளார்.

இதையடுத்து அபிராமபுரம் ஜிப்சி பேட்ரால் பெண் காவலர் சிவகாம சுந்தரி அங்கு சென்று விவரம் கேட்டுள்ளார். அப்போது போலீஸ் என்ற வாசகத்துடன் சுழல் விளக்குடன் வேகமாக வெள்ளை நிற டாடா வாகனம் ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து விஜயகாந்த் பாணியில் இறங்கிய ஒருவர் காவலர் சிவகாம சுந்தரியைப் பார்த்து, ''என்ன இங்கு வந்திருக்கிறாய் போன் செய்தால் வந்துவிடுவாயா, போ'' என்று அலட்சியமாகப் பேசியுள்ளார்.

''சார். 100-க்கு புகார் வந்தது நான் விசாரித்து ரிப்போர்ட் கொடுக்கணும்'' என்று காவலர் சிவகாமசுந்தரி சொல்ல, ''ஷட் அப் யூ, பிளடி நான்சென்ஸ், நீ ஒரு போலீஸ் ஐபிஎஸ் ஆபிஸர் கிட்ட பேசுகிறாய் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்'' என்று அவர் எகிற, சப்தநாடியும் ஒடுங்கிப்போன சிவகாம சுந்தரி எஸ்.ஐ.யைக் கூப்பிடாமல் தனியாக வந்தது தவறு என்பதை அப்போதுதான் உணர்ந்துள்ளார்.

தனது தொப்பியை எடுத்துவர, டிரைவர் ஆயுதப்படைக் காவலரை திரும்பிப் பார்க்க அவர் ஜீப்பின் அருகில் பவ்யமாய் ஓடிப்போய் நிற்பதைப் பார்த்து இனி இப்படி நின்றால் சிக்கல் என நினைத்த சிவகாம சுந்தரி ஓடிப்போய் தொப்பியை எடுத்து தலையில் போட்டுக்கொண்டு வந்து ஒரு பெரிய சல்யூட்டை அந்த ஐபிஎஸ் ஆபிஸருக்கு அடித்து சார் என்று நின்றுள்ளார்.

''சரி, நீ போ. நான் ஸ்டேஷனுக்கு வந்து அங்க பேசிக்குறேன்'' என்று ஐபிஎஸ் ஆபிஸர் சொல்ல, விட்டால் போதும் என்று ஜிப்சியில் ஏறி வண்டி நேராக போலீஸ் ஸ்டேஷனில் வந்து நின்றது. இன்ஸ்பெக்டர் என்னம்மா என்று கேட்க,  ''சார் நல்லா வம்புல மாட்டிவிட்டீங்க அங்க ஒரு ஐபிஎஸ் ஆபிஸர் என்னை உண்டு இல்லைன்னு பண்ணிட்டார் இங்க ஸ்டேஷனுக்கு வர்றேன்னு சொல்லி விரட்டி விட்டார் சார்'' என்று காவலர் சிவகாம சுந்தரி பதற்றத்துடன் கூறியுள்ளார்.

''இங்கேயே வருகிறாரா, ஐபிஎஸ் ஆபிஸரா நல்லா விசாரிச்சாயா'' என்று கேட்க, ''ஆமா சார் விஜயகாந்த் மாதிரி நல்லா கம்பீரமா சர்ருன்னு காரில் வந்து இறங்கினார் சார்'' என்று சிவகாம சுந்தரி சொல்ல இப்போது பதற்றம் இன்ஸ்பெக்டருக்கும் தொற்றிக்கொண்டது.

போலீஸாரை அழைத்து, ''பாராகாரனை துப்பாக்கியோட கார்டு நிற்கச்சொல்லு, என் சேரில் இருக்கும் இந்த டவலை மாற்று, கொஞ்சம் ஸ்டேஷனை சுத்தம் பண்ணுங்க'' என்று விரட்டி அனைவரும் தயாராக ஐபிஎஸ் ஆபிஸரை எதிர்பார்த்து பதற்றத்துடன் இருந்தனர்.

அப்போது சுழல் விளக்கு எரிய ஸ்டேஷனுக்குள் சர்ரென்று கார் வந்து நிற்க கம்பீரமாக அதே விஜயகாந்த் ஸ்டைலில் இறங்கி நபர் கூலிங்கிளாஸை கழற்றிவிட்டு உள்ளே வந்துள்ளார். கார்டு துப்பாக்கி சல்யூட் வைக்க, கோபமாக உள்ளே வந்தவரை இன்ஸ்பெக்டர், எஸ்.ஐக்கள், ஏட்டையாக்கள் எதிர்கொண்டு அழைத்துச் சென்று இன்ஸ்பெக்டர் ரூமில் அவரது சேரில் அமர வைத்துள்ளனர்.

தப்பு செய்தது போல் நின்றபடி அவரது வார்த்தைக்காகக் காத்திருந்தனர். தனது கம்பீரக் குரலால் இன்ஸ்பெக்டர் பெயரைக்கேட்ட அவர் இதற்கு முன் இருந்த ஸ்டேஷன் பற்றி எல்லாம் கேட்டுள்ளார். தயங்கித் தயங்கி ''ஐயா யாருன்னு சொன்னால் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிடுவேன், ஏசி ஐயாவும் வந்துக்கிட்டிருக்கார்’’ என்று கூறியுள்ளார் இன்ஸ்பெக்டர்.

''நான் சிபிஐ இன்டர்போல் டிசி, ஐபிஎஸ் ஆபிஸர். டிஜிபி மஞ்சுநாதா தெரியுமா அவரிடம் நான் பணியாற்றியுள்ளேன்'' என்று கூறியுள்ளார். ஐயா சிபிஐ, டிஐஜி சார்கூட எனக்கு பழக்கம் என இன்ஸ்பெக்டர் சொல்ல அவர் சற்று தயங்கியுள்ளார்.

இன்டர்போல் அதிகாரி, சிபிஐ அதிகாரி என்று சொல்கிறார் ஆனால் பகிரங்கமாக போலீஸ் என்று போட்டு சுழல் விளக்கு வாகனத்தில் வருகிறாரே, கூட ஒரு டிரைவர் இல்லை, வெயிட்டிங் பிஸி கூட இல்லையே என இன்ஸ்பெக்டர் யோசித்துள்ளார்.

அதன்பிறகு மேலும் விசாரிக்க அவர் உளற ஆரம்பித்துள்ளார். இன்ஸ்பெக்டரை உட்காரச் சொல்லி இருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் உதவி ஆணையருக்கு தகவல் கொடுக்க அவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இதற்குள் வந்திருப்பவர் போலி ஐபிஎஸ் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் ஏசி சுதர்சன் வந்தவுடன் ''சீட்டை விட்டு எழுந்திரு, நீ யார''  என போலீஸ் பாணியில் அதட்டலுடன் கேட்க ஐயா உண்மையைச் சொல்லிவிடுகிறேன் என்று காலில் விழுந்துள்ளார்.

அடப்பாவி உனக்காக என் சீட்டை கொடுத்து உட்காரவைத்து சல்யூட் அடித்து என்ன மரியாதை செய்தேன் என்று இன்ஸ்பெக்டர் கோபத்துடன் கேட்டுள்ளார். பின்னர் போலீஸ் பாணியில் விசாரணை நடத்த அவர் பெயர் சிவநேசன் (25) என்பதும் மேற்கு மாம்பலம் குப்பையா தெருவில் வசிப்பவர் என்பதும், போலீஸ் அதிகாரிபோல் வாகனத்தில் சுழல் விளக்கு வைத்து சென்னை முழுவதும் சுற்றி இதேபோன்று மிரட்டி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

ஊரெல்லாம் மிரட்டுகிறவனை போலீஸ் பிடிக்கும் நீ போலீஸ் ஸ்டேஷனிலேயே வந்து மிரட்டுகிறாயா? என்று அவரைக் கைது செய்த போலீஸ் அவர் வாகனத்தைச் சோதித்தபோது வாகனத்தில் சில கஞ்சா பொட்டளங்கள் இருந்துள்ளது, அவர் மீது ஐபிசி பிரிவு 170, 353 506(1) மற்றும் போதைப்பொருள் கடத்தல் சட்டம் 8-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவருக்கும் சஹானாவுக்கும், ராஜாமுகமதுவுக்கும் என்ன சம்பந்தம் எனவும் இதில் போலி அதிகாரியை ஏன் அவர்கள் வரவழைத்தார்கள் என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x