Published : 22 Sep 2018 02:29 PM
Last Updated : 22 Sep 2018 02:29 PM

யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அடித்த கும்பல்: ஆலோசனை கூறிய பெண் உட்பட 4 பேர் கைது

யூடியூப் பார்த்து சமையல் செய்யக்கற்றுக் கொள்வது போல் நாமக்கல் மாவட்டத்தில் யூடியூபை பார்த்து கள்ளநோட்டு அடித்த பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட போலீஸாருக்கு குடிசை வீட்டில் கள்ளநோட்டு அடிப்பதாக செல்போன் தகவல் ஒன்று ரகசியமாக வந்தது. அந்த மெசேஜில் உள்ள செல்போனை போலீஸார் கண்காணித்தனர். அந்த எண்ணை போலீஸார் தேடியபோது அது அணைக்கப்பட்டிருந்தது.

போலீஸார் அந்த எண் அமைந்துள்ள விலாசத்தை கண்டுபிடித்து அங்கே சென்றனர். பள்ளிப்பாளையம் அருகே பாப்பாம்பாளையத்தில் அந்த இடம் இருந்தது. ஆனால் அது ஒரு குடிசை வீடாக இருந்தது. இதனால் போலீஸார் இதிலென்ன இருக்கப்போகிறது என்று நினைத்தனர்.

சரி வந்துவிட்டோம் குடிசைக்குள் சென்று பார்ப்போம் என்று குடிசைக்குள் நுழைந்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. குடிசைக்குள் லாப்டாப், ஜெராக்ஸ் மெஷின், ஸ்கேன் மெஷின்கள், 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்ட ஷீட்டுகள் கட்டுக்கட்டாக கட்டப்பட்ட கள்ள நோட்டுகள் இருந்தன.

இதைப்பார்த்து அதிர்ந்துப்போன போலீஸார் அங்கிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். குடிசை வீட்டுக்கு சொந்தக்காரரான சுகுமார் என்பவரையும், அங்கிருந்த நாகூர்பானு என்கிற பெண்ணையும் உடனிருந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில் அவர்கள் கூறிய தகவல் போலீஸாருக்கு ஒருபக்கம் சிரிப்பை வரவழைத்தாலும் மற்றொருபுறம் இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்க இணையதளங்கள் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.

சுகுமார் பிளாஸ்டிக் பைப்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மூலப்பொருட்கள் விலையேற்றம், மின் கட்டண உயர்வு, வரி, வங்கிக்கடன் போன்ற பிரச்சினைகளால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால்ஏற்பட்ட விரக்தியில் இருந்த சுகுமார், அதே ஊரில் பேக்கரி கடை நடத்தும் தனக்கு தெரிந்த நாகூர் பானுவிடம் தனது நிலையையும், கடன் சுமையையும் கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது நாகூர்பானு குறைந்த முதலீட்டில் பணம் சம்பாதிக்க எளிதாக வழி இருப்பதாகவும் அதற்கு மூளையை மட்டும் சற்று உபயோகப்படுத்தினால் போதும் என்றும் கூறியுள்ளார்.

அதென்ன வழி, எதுவாக இருந்தாலும் செய்யலாம் என்றவுடன், நாகூர்பானு திட்டத்தை விவரித்துள்ளார். சமீபத்தில் யூடியூபில் கள்ளநோட்டுகளை எப்படி துல்லியமாக ஸ்கேனர், ஜெராக்ஸ் மெஷின்கள் மூலம் அடிக்கலாம் என்று பார்த்தேன், தோதான ஆள் இல்லாததால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன் நீங்கள் ஓகே சொன்னால் நோட்டடிக்க ஆரம்பித்துவிடலாம், அதன் பின்னர் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று ஆசைக்காட்ட சுகுமார் உடன்பட்டிருக்கிறார்.

அதன்பின்னர் மேற்கண்ட கருவிகளை வாங்கி யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சுகுமாரின் குடிசையிலேயே, தன்னுடன் நம்பிக்கையான மேலும் இருவரை சேர்த்துக்கொண்டு கள்ள நோட்டு அடிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் கொண்ட ஒருவர் இதை திருச்செங்கோடு போலீஸுக்கு தகவலாக அளிக்க அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை கைது செய்த போலீஸார் அனைத்து கருவிகளையும், கள்ள நோட்டுகளையும் கைப்பற்றினர். மேலும் இதுவரை அவர்கள் எவ்வளவு நோட்டுகள் அடித்துள்ளனர், அவர்களுக்கு கள்ள நோட்டு கும்பல் யாருடனாவது தொடர்பு உள்ளதா? என போலீஸார் விட்சாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து உடற்பயிற்சி செய்வது, பிரசவம் பார்ப்பது, யூடியூப் பார்த்து சமையல், செய்வது என்பதை தாண்டி கள்ள நோட்டு அடிக்கும் அளவுக்கு சமூகம் வளர்ந்துள்ளதே என்று ஆதங்கப்படும் போலீஸார் அந்த யூடியூப் பக்கத்தை முடக்க முடியுமா என ஆலோசித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x