Published : 18 Sep 2018 09:48 AM
Last Updated : 18 Sep 2018 09:48 AM

முதல்முறையாக ஆன்லைனில் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு: செப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

“நெட்” எனப்படும் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணிபுரிய நெட் அல்லது ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர் ஆகலாம். அதேநேரத்தில் மாநில அளவில் நடைபெறும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். கடந்த ஆண்டு வரை நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் சிபிஎஸ்இ அமைப்பு நடத்தி வந்தது. இந்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை எனப்படும் புதிய அமைப்பு நெட் உட்பட ஜெஇஇ, நீட் என தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்த உள்ளது. அதுமட்டுமின்றி நெட் தேர்வானது முதல்முறையாக ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய தேர்வு முகமையின் முதல் நெட் தேர்வு டிசம்பர் மாதம் 9-ம் தேதி முதல் 23-ம் தேதி பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்படும். இத்தேர்வுக்கு கலை அறிவியல் படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், ஓபிசி எனப் படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் எனில் 50 சதவீத மதிப்பெண் போதும். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடைவர் ஆவர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எனினும் ஜெஆர்எப் எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கு மட்டும் வயது வரம்பு 30 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய அமைப்பு தேர்வை நடத்தினாலும் தேர்வுமுறையிலோ பாடத்திட்டத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை. தகுதியுள் ளவர்கள் www.ntanet.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இம்மாதம் 30-ம் தேதிக் குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.இந்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை எனப்படும் புதிய அமைப்பு நெட் உட்பட ஜெஇஇ, நீட் என தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்த உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x