Published : 04 Sep 2014 12:42 PM
Last Updated : 04 Sep 2014 12:42 PM

நாமக்கல்லில் 76 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 76 குழந்தைகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகளில் 56 பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தற்போது நன்றாக பயின்று வருகின்றனர் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பேசினார்.

நாமக்கல்லில் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி முகாமை துவக்கி வைத்து பேசியது:

நமது சமுதாயத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச் சனை அதிகம் உள்ளது. அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை கவனமாக கண்காணிக்க வேண்டிய பிரச்சனைகளாகும். குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் பல்வகைப்படுத்தப் படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற முதலாவது பிரச்சனை குழந்தை தொழிலாளர் முறை. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் தவிர்த்திட தேசிய குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 85 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் 21 சிறப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதுவரை இப்பள்ளிகளில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 487 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இக்குழந்தைகள் சராசரி கல்வியைப் பெற்றவுடன் மற்ற குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு படிக்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலா ளராக இருந்து மீட்கப்பட்ட மாண வன் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,144 மதிப்பெண் பெற்று, தற்போது தஞ்சை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகின்றார். குழந்தைகளுக்கு ஏற்படும் இரண்டாவது பிரச்சனை குழந்தை திருமணம். குழந்தை திருமணம் முற்றிலும் தடுக்கப்படவேண்டும். நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் அறியாமையின் காரணமாக சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்தி விடுவதாக விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் 76 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகளில் 56 குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தற்போது நன்றாக பயின்று வருகின்றனர். குழந்தை திருமணத்தை தடுப்பதற்குரிய பங்கு அனைவரிடத்திலும் உள்ளது. அதிலும் குறிப்பாக ஆசிரியர்களிடம் அதிகம் உள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சினை பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பாலியல் வன்கொடுமை தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனைகள்; பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை கள் மெற்கொள்ளப்பட்டு வருகின்றது’’,என்றார்.

முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான திறன் பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. இம்முகாம் வரும் 16ம் தேதி வரை பல்வேறு துறையினருக்கு நடத்தப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல்வம், முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x