

காதலியைக் கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசிய இளை ஞரை போலீஸார் கைது செய்தனர்.
வாணியம்பாடி தாலுகா, ஊசி தோப்பு காளியப்பன் வட்டம் பகுதியில் விவசாயக் கிணற் றில் இளம்பெண் ஒருவர் திங்கள் கிழமை கொலை செய்து வீசப் பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸார் அங்கு சென்று, கிணற்றில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண் பேராணம்பட்டு ஏரிக்குத்தி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் மகள் மேத்தா (30) என்பதும், அவர் அழகுக் கலை நிபுணர் என்பதும் தெரியவந்தது. மேத்தாவை கொலை செய்தது வாடகைக் கார் ஓட்டுநராக வேலை பார்க்கும் வாணியம்பாடியைச் சேர்ந்த அவரது காதலன் வினோத் (36) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கார் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கார் ஜாக்கி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த கொலை குறித்து போலீஸில் வினோத் வாக்குமூலம் அளித் துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ‘‘வினோத்தும், மேத்தாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேத்தா 2 வயது மூத்தவர் என்பதால் காதலுக்கு வினோத்தின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் காதலியை சந்திப்பதை வினோத் தவிர்த்துள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 8-ம் தேதி வினோத் தனது பிறந்தநாளை முன்னிட்டு மேத்தாவை அழைத்துக்கொண்டு பர்கூர், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஜவுளி, இனிப்பு வகைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
வாணியம்பாடிக்கு திரும்பி வந்தபோது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மேத்தா வற்புறுத்தியுள்ளார்.
திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் வினோத்தைப் பற்றிய ரகசியங்களை வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவேன் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார் ஜாக்கியை எடுத்து அடித்து மேத்தாவை கொலை செய்து, சடலத்தைக் கிணற்றில் வீசியுள்ளார்’’ என்றனர்.