Published : 04 Sep 2018 01:07 PM
Last Updated : 04 Sep 2018 01:07 PM

மெட்ரோ ரயிலில் மாற்றுக்கருத்து சொன்னவரை தாக்கியவர்தானே நீங்கள்: ஸ்டாலின் மீது தமிழிசை தாக்கு

 விமான நிலையத்தில் தன்னை எதிர்த்துக் கோஷமிட்ட பெண்ணை ஆதரித்து ட்வீட் செய்த ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, ''மெட்ரோ ரயிலில் மாற்றுக் கருத்து சொன்னவரை தாக்கியவர் தானே நீங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தமிழிசை பின்னால் அமர்ந்திருந்த சோபியா என்ற பெண் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டுள்ளார். இது குறித்து தமிழிசை அளித்த புகாரில் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

தமிழிசை உட்பட 10 பேர் தங்கள் குடும்பத்துக்கு கடுமையான கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை புகார் அளித்துள்ளார்.

விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''இரவு 10.20-க்கு விமானம் புறப்பட்டது. அந்தப் பெண் 10.22க்கு தமிழிசை இப்ப என்னோட ப்ளைட்ல இருக்காங்கங்க என்று ட்வீட் போட்டிருக்காங்க. விமானத்தின் உள்ளே அந்தப் பெண் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார். நான் மற்ற பயணிகளின் நலன் கருதி அமைதியாக இருந்தேன்.

வெளியே வந்து அவரிடம் இப்படிக் கோஷமிடலாமா என்று கேட்டேன். அது எனது உரிமை என்றார். உரிமை என்றால் மேடை போடுங்கள் நானும் விவாதத்துக்கு வருகிறேன் என்றேன். அதன் பின்னர் அவர் பேசிய வார்த்தைகள் இங்கே சொல்ல முடியாது. விமானம் மற்ற பயணிக்களுக்கானது, அமைதியாக இருக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னேன். அதற்காக விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தேன்.

அவர்கள் பின்புலத்தை நான் சந்தேகிக்கிறேன், அவர் எழுந்து நின்று கையை உயர்த்தி கோஷமிட்ட  விதம, அவருக்கு ஏதோ பின்புலம் உள்ளதாகக் கருதுகிறேன். இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்களுக்கு எதிராக கோஷமிட்டால் சும்மா விடுவார்களா. என் கையில் உள்ள வீக்கத்தைப் பாருங்கள். எங்கோ வட மாநிலத்தில் உள்ள ஒருவர் பேசியதால் திமுகவினர் கமலாலயம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட வீக்கம் இது.

இரண்டு அரசியல் கொள்கையுள்ள தலைவர்கள் விமானத்தில் வரும்போது சண்டை போட்டுக்கொள்ளலாமா? அது சரியாக இருக்குமா? ஆகவே என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரிதான். நான் எந்தத்தவறும் செய்யவில்லை. யாராக இருந்தாலும் விமானத்திற்குள் இதைவிட மோசமாக நடந்து கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் நீங்கள் கொடுத்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்களே?

நான் எதிர்க்கட்சித்தலைவர்களைப் பார்த்துக்கேட்கிறேன், அண்ணன் ஸ்டாலினை பார்த்துக் கேட்கிறேன், அவரது ட்வீட்டை  நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரை எதிர்த்துக் கோஷமிட்டால் அது உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதா? மாற்றுக்கருத்து சொன்ன நபரை மெட்ரோ ரயிலில் அடித்தவர் நீங்கள்.

தினகரன் பத்திரிகை அலுவலகத்தை எரித்தவர்கள் நீங்கள். ஆனால் நான் அப்படியல்ல, எனது கட்சியைப் பற்றி எதிர்த்து கோஷமிட்டார். அதுவும் விமானத்தின் உள்ளே கோஷமிட்டபோதும் அமைதியாகத்தான் இருந்தேன்.

அப்படியானால் அவர்கள் உங்கள் மீது கொடுத்த புகாரின்மீதும் ஏன் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை?

எப்போது கொடுத்தார்கள். அனைத்தையும் பரிசீலித்து மாலையில் புகார் அளித்துள்ளார்கள்.

வாபஸ் வாங்க முகாந்திரம் உண்டா?

இல்லை. வாபஸ் வாங்க மாட்டேன்.

ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை உள்ளது என்று ஸ்டாலின் சொல்கிறாரே?

அது விமானத்துக்குள்ளாகவா? உங்கள் வீட்டுக்குள் வந்து சத்தம் போடுவார்களா? பேச்சுரிமை உள்ளது. அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. தளம் இருக்கிறது. இதே அரசியல் கட்சித் தலைவர்களை எதிர்த்து கோஷம் போட்டால் அவர்கள் சும்மா இருப்பார்களா?

பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்திய மாணவர்களை போலீஸார் கண்டித்து விட்டுள்ளனர். ஆனால் ஒரு ஆராய்ச்சி மாணவியை உங்கள் அழுத்தம் காரணமாக போலீஸார் கைது செய்துள்ளனர் என்கிறார்களே?

போய் போலீஸாரை கேளுங்கள். நான் புகார் அளித்துவிட்டு வந்துவிட்டேன். நான் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்றால் வேறு எவ்வளவோ வழிகளில் கொடுத்திருக்கலாம்.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x