Published : 02 Sep 2018 03:40 PM
Last Updated : 02 Sep 2018 03:40 PM

நேரடி கொள்முதல் நிலையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது கண்டனத்துக்குரியது: முத்தரசன்

நேரடி கொள்முதல் நிலையங்களை மூட  அரசு  உத்தரவிட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விவசாயிகள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். உற்பத்திப் பொருள்களுக்கு மத்திய அரசு இதுநாள் வரை கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யவில்லை.

உற்பத்தி ஆகும் செலவுகளை கணக்கில் கொள்ளாமல் குறைந்தபட்ச விலையே நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சாமிநாதன், உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்று கூறிய பரிந்துரையை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை . இந்நிலையில், அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையை, அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் தான் விவசாயிகள் பெற்று வந்தனர்.

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து, தமிழ்நாடு அரசு அதனை ஏற்று, ஆகஸ்ட் 31 முதல் நேரடி கொள்முதல் நிலையங்களை மூடி இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். அரசின் இந்நடவடிக்கையால் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலை, விவசாயிகளுக்கு கிடைக்காமல் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்யக் கூடிய மிக மோசமான செயலாகும்.

காவிரி பாசன மாவட்டங்களிலும் மற்ற மாவட்டங்களிலும் பம்புசெட் பாசன வசதியுள்ள விவசாயிகளின் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில், நேரடி கொள்முதல் நிலையங்களை மூடுவது என்ற அரசின் முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசின் முடிவை திரும்பப் பெற்று அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கவும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யவும், அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x