Published : 20 Sep 2018 08:47 PM
Last Updated : 20 Sep 2018 08:47 PM

முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் காலமானார்

முதுபெரும் தமிழறிஞரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான புலவர் கி.த.பச்சையப்பன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 85.

23.10.1935-ல் புதுச்சேரியில் கி.தங்கவேல், தனம் அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பச்சையப்பன் தனது பதின் வயதிலேயே பிரெஞ்சு ஆதிக்கத்தில் புதுச்சேரி இருப்பதை எதிர்த்துப் போராடினார். புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று முழக்கமிட்ட இவர் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

தமிழறிஞர், மொழிப் போராட்டத் தியாகி, ஈழத் தமிழ் உணர்வாளர், தமிழகத் தமிழாசிரியர் கழகம் மற்றும் தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் என தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தன் வாழ்க்கையை தகவமைத்துக் கொண்ட தமிழ்ப் புதல்வர் பச்சையப்பன். பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சுமார் 70 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்குமாறு டெல்லிக்கும் சென்று முழக்கமிட்டார். தமிழ்த் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த சென்னை இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்தவர் கி.த.பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் வசித்து வந்த புலவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சிவில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்னை வந்தார். இந்நிலையில் உயர் நீதிமன்றம் வந்த புலவர் பச்சையப்பன் திடீரென்று மயங்கி விழுந்தார். மாரடைப்பு ஏற்பட்டதால் நீதிமன்ற வளாகத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

தமிழ் மொழியின் பெருமையை அடுத்து வரும் தலைமுறையினரும் உணரும் வண்ணம் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பேசி வந்த புலவர் கி.த.பச்சையப்பன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x