Published : 17 Sep 2018 11:04 AM
Last Updated : 17 Sep 2018 11:04 AM

திமுக தோன்றிய நாள்; வீணர்களின் ஆட்சியை வீழ்த்திட வீறுகொண்டு களம் புகுவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

திமுக தோன்றிய நாளான இன்று திமுகவைக் கட்டிக் காப்போம் என, தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில், “கருணாநிதி இல்லாமல் முதல் முப்பெரும் விழா; சொல்லவே இதயம் கனக்கிறது. விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு குவிந்திட்ட தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

வெறுமனே காகங்களைப் போலக் கூடிக் கலைந்தோம் என்றில்லாமல், மேகங்களைப் போலக் கூடிப் பொழிந்தோம் என்று கருணாநிதி குறிப்பிட்டதற்கு ஒப்ப, கொள்கைத் திட்டங்களை வகுத்து, லட்சியப் பாதையில் அதனைக் கவனமுடன் செயல்படுத்தி, இலக்கினை உறுதியாக அடைவதற்காகத்தான் திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் வகுத்து அதன்வழி நடைபெறுகின்றன.

செப்டம்பர் 18 ஆம் தேதி திமுக சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் அறப் போராட்டம் நடைபெற உள்ளது.

ஊழலில் புற்றுநோயெனப் புரையோடிப் போயிருக்கும் அதிமுக ஆட்சிக்கு எதிரான, மாபெரும் அறப்போராட்டக் களம். திமுக தொண்டர்களின் பெருந்திரள் பங்கேற்பினாலும் விண்ணதிரும் லட்சிய முழக்கங்களாலும், கோட்டையில் இருப்பவர்கள் குலை நடுங்கப் போகும் போராட்டம். ஊழல் பேர்வழிகளை கையால் அரவணைத்து அடிமையாக்கி, மாநில உரிமைகளை காலால் நசுக்குகின்ற மத்திய மதவெறி பாசிச ஆட்சியாளர்களுக்கு, தீர்மானமான எச்சரிக்கை விடுக்கும் போராட்டம்.

கருணாநிதி அந்நாள்களில் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தபோது வாழ்ந்த ஊரான சேலத்தில், உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன். திமுக முன்னோடிகள் பல்வேறு மாவட்டங்களிலும் தலைமை தாங்கி நடத்துகிறார்கள்.

செப்டம்பர் 18, திமுக வரலாற்றில் சிறப்பு மிக்க நாள். தனது தலைவரான பெரியாரிடமிருந்து விலகினாலும், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் நாள்தான் திமுகவைத் தொடங்கினார் அண்ணா. ஒரே கொள்கையுடன், இரட்டைக் குழல் துப்பாக்கியாக இரு இயக்கங்களும் இனப்பகைக்கு எதிராக நின்ற வரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு. திமுக சென்னை மண்ணடி பவழக்காரத் தெருவில் உள்ள இல்லத்தில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு மறுநாள் செப்டம்பர் 18 ஆம் நாள் அன்றுதான் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் திமுகவின் அதிகாரபூர்வப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் திரண்டிருந்த தோழர்களிடையே திமுகவை அறிமுகப்படுத்தி அற்புத உரையாற்றினார் அண்ணா.

அந்த வரலாற்று நினைவுகளுடன், விழுப்புரத்தில் முப்பெரும் விழாவைச் சிறப்பாக நடத்தித் தந்தமைக்காக மாவட்டக் கழக நிர்வாகிகள் தொடங்கி ஒவ்வொரு தொண்டருக்கும் என் இதயத்தில் மலரெடுத்து நன்றி மாலை தொடுக்கிறேன். முப்பெரும் விழா சிறக்கக் கண்டோம். இனி முப்போதும் வெற்றி காண்போம். அதனால், எப்போதும் நம் பணி ஓய்வதில்லை என்ற உணர்வுடன், திமுக தோன்றிய நாளான செப்டம்பர் 17 ஆம் நாளில், நம் கண் போன்ற இயக்கத்தைக் கட்டிக் காப்போம் எனத் தலைவர் கருணாநிதியின் மீது உறுதியேற்று, செப்டம்பர் 18 ஆம் நாள் நடைபெறும் அறப்போர் களத்திற்கு ஆயத்தமாவோம். வீணர்களின் ஆட்சியை வீழ்த்திட வீறுகொண்டு களம் புகுவோம். வெற்றி இலக்கினை நோக்கி விரைந்து செல்வோம். நாட்டைப் பிடித்திருக்கும் பிணிபோக்கிட அணி அணியாய் நடைபோடுவோம்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x