Published : 17 Sep 2018 08:44 AM
Last Updated : 17 Sep 2018 08:44 AM

புழல் சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை எதிரொலி; கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் திடீர் சோதனை: செல்போன் பேட்டரிகள், பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் சிக்கின

சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

சென்னை புழல் மத்திய சிறைக் குள் கடந்த 3-ம் தேதி சிறைத்துறை விஜிலன்ஸ் பிரிவு டிஎஸ்பி ஜீவானந் தம் தலைமையிலான போலீஸார் சோதனை செய்தனர். அப்போது கைதிகள் அறைகளில் செல்போன்கள், எப்எம் ரேடியோக்கள், கஞ்சா பொட்ட லங்கள் போன்றவை இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில், சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா சிறைத்துறை அதிகாரிகளிடம் விசா ரணை நடத்தினார்.

மேலும், உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொகுசு வசதிகளுடன் இருப்பது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. கைதிகள் அறைகளில் கலர் டிவிக்கள், வீட்டு சாப்பாடு சாப்பிடுவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது, பல வண்ணங் களில் ஸ்டைலாக ஆடை அணிந்திருப் பது போன்ற புகைப்படங்கள் வெளி யாகின. அதைத் தொடர்ந்து புகைப்படத் தில் இருந்த 5 கைதிகளையும் வேறு சிறை களுக்கு மாற்றி சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார்.

இதன்படி, கள்ளத்துப்பாக்கி வழக் கில் கைது செய்யப்பட்ட முகமது ரபீக் கோவை சிறைக்கும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான முகமது இப்ராஹிம் சேலம் மத்திய சிறைக்கும் முகமது ரியாஸ் பாளையங்கோட்டை சிறைக்கும் விசாரணை கைதிகளான முகமது ஜாகீர் வேலூர் சிறைக்கும் நூருதீன் திருச்சி சிறைக்கும் மாற்றப் பட்டனர். சிறைகளில் கைதிகள் சொகுசு வசதிகளுடன் வாழ்கின்றனர் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மத்திய சிறையில் காவல் உதவி ஆணையர் சுந்தர்ராஜ், சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 60 போலீஸார் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சேலம் மத்தியச் சிறையில் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலை மையில் 40 போலீஸார் திடீர் சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் அறையிலும் கழிவறைகளிலும் சோதனை நடத்தினர்.

கடலூர் டிஎஸ்பி லாமேக் தலைமையில் சுமார் 100 போலீஸார் கடலூர் மத்திய சிறையில் சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா என்று சோதனையிட்டனர்.

3 சிறைகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் செல்போனுக்கு பயன்படுத்தும் பேட்டரிகள், பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கமாக சிக்கும் செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் போன்றவை சிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறும்போது, “மத்திய சிறைகளில் முதல் வகுப்பு பிரிவில் இருக்கும் கைதிகள் தங்களது அறைகளில் தொலைக்காட்சிகளை வைத்துக் கொள்ளவும் வீட்டு சாப்பாடு சாப்பிடு வதற்கும் சிறை விதி அனுமதிக் கிறது. மேலும் இந்த விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளவும் சுவற்றில் படம் வரைந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. இதை சிறை அதிகாரிகள் அனுமதியுடன் கைதி களே செய்து கொள்ளலாம். சில அதிகாரிகள் உதவியுடன் செல் போன்கள் மட்டும் சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x