Published : 24 Sep 2018 04:30 PM
Last Updated : 24 Sep 2018 04:30 PM

தஞ்சை, திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

தஞ்சாவூரிலும், திருச்சியிலும் பெரியார் சிலைக்கு மீண்டும் அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள காவாரப்பட்டில் பெரியார் சிலை உள்ளது. இந்தச் சிலையை இன்று காலை காண வந்த அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிலைக்கு யாரோ விஷம நபர்கள் காலணி மாலை (செருப்பு மாலை)அணிவித்திருந்தனர்.

இந்தத் தகவலை அறிந்த திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை அவமதித்தவர்களைக் கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர். தஞ்சாவூர் - ஒரத்தநாடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டையில் உள்ள பெரியார் சிலையின் கைத்தடியை சில மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை அண்ணா சாலையில் பெரியார் பிறந்த தினம் அன்று காலணி வீசிய பாஜக வழக்கறிஞர் ஜெகதீசன் என்பவரை விசிக தொண்டர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த நிலையில் அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்று அதே நாளில் தாராபுரத்திலும் பெரியார் சிலையை அவமதித்த நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x