Published : 19 Sep 2018 10:13 AM
Last Updated : 19 Sep 2018 10:13 AM

எம்ஜிஆர் கட்சி தொடங்கி இருக்காவிட்டால் அண்ணா பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

கொடியில் அண்ணா உருவத்தைப் பொறித்து, அவரது பெயரில் கட்சியை எம்ஜிஆர் தொடங்கி இருக்காவிட்டால் அண்ணாவைப் பற்றி இன்று பலருக்கும் தெரியாமல் போயிருக்கும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு முனிச்சாலை அருகே நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

எம்ஜிஆர் அதிமுகவை 1972-ல் தோற்றுவித்தபோது கட்சிக் கொடியில் அண்ணா உருவத்தைப் பொறித்து, அண்ணா பெயரை வைத்து கட்சி தொடங்கினார். அண்ணாவின் பெயரை எம்ஜிஆர் வைத்திருக்காவிட்டால் அண்ணா என்ற ஒருவர் இருந்தார் என்பது இன்று பலருக்கு தெரியாமலேயே போயிருக்கும்.

அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்துக்களில் அக்கட்சியினர் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். அவர்களைக் கைது செய்தால் தவறு என்கிறார் ஸ்டாலின்.

தேசிய அளவில் தமிழகத்தில் தான் குற்ற சதவீதம் குறைவு. குற்றவாளிகளிடம் இருந்து சொத்துக்கள் மீட்பு என்பது உட்பட பல விஷயங்களில் தமிழகத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. ஸ்டாலின் எதையும் ஆராயாமல் பேசக்கூடாது.

மின்சாரத்தைப் பற்றி ஸ்டாலி னும், தினகரனும் பேசி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடி மின் பயனீட்டாளர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, இதில் ஸ்டாலின், தினகரன் கூட பயன் பெறுகின்றனர். திமுக ஆட்சியில் மின்வெட்டை உருவாக்கிய ஸ்டாலினுக்கு மின்சாரத்தைப் பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என்றார்.

தினகரன் மீது விமர்சனம்

கட்சிக் கூட்டங்களில் ஸ்டாலின், கருணாநிதியை மட்டுமே செல்லூர் ராஜூ கடுமையாக சாடிப் பேசுவார். தினகரன் குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம் செய்ததில்லை. இந் நிலையில் தினகரனை அவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து கட்சியினர் கூறும் போது, தினகரனை விமர்சித்தால் மட்டுமே திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரிலேயே பலரும் தினகரனை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x