Published : 05 Sep 2018 09:50 PM
Last Updated : 05 Sep 2018 09:50 PM

குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார்; மாதவராவ் யாரென்றே தெரியாது: விஜயபாஸ்கர்

அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி என்னை அரசியலில் இருந்து அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை என அமைச்சர் விஜய பாஸ்கர் சிபிஐ ரெய்டு குறித்து பதிலளித்துள்ளார்.

குட்கா முறைகேடு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட 35 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது.

இதையடுத்து விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். ரெய்டு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

“ஜெயலலிதாவின் அரசு, குட்கா மற்றும் பான்மசாலா விற்பனையை 2013-ம் ஆண்டு மே. 23 அன்று தடைசெய்து அதை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக பல சீரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

மேலும், குட்கா மற்றும் பான்மசாலா தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே சந்திக்காத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி என்னை அரசியலில் இருந்து அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

மேற்படி பிரச்சினை குறித்து தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப்படையில் எந்த விசாரணைக்கும் என் ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளேன். இன்று நடந்த சோதனைக்கும் என் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளேன்.

“காய்த்த மரம்தான் கல்லடிபடும்” என்கிற ரீதியில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது குறிப்பாக, இரவும் பகலும் பாராமல் பொதுச் சேவை ஆற்றி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையை இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகள் எழுப்புவது இயல்புதான்.

குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். இதுபோன்ற பிரச்சினைகள் எனது அரசியல் வாழ்வில் ஏற்படும் பொழுதெல்லாம், அவற்றையெல்லாம் கடந்து தொடர்ந்து வெற்றி பெற்று மக்கள் பணியில் தொய்வின்றி ஈடுபட்டு வருகிறேன்.

இப்பொழுதும் சொல்கிறேன், எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளி வருவேன் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x