Published : 30 Sep 2018 03:49 PM
Last Updated : 30 Sep 2018 03:49 PM

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: சாலையை ஆக்கிரமித்து வைத்த பேனர்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னைஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வரும், அதிமுக ஸ்தாபகருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (செப்.30) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

இந்த விழாவுக்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதால் விதிமீறல் பேனர்களை அகற்றக்கோரியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையில் டிராபிக் ராமசாமி புகார் அளித்தார்

போலீஸார் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹிலரமானியிடம் முறையிட்டதையடுத்து, நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வு விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து டிராபிக் ராமசாமி நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், பேனர்களை அமைக்க முறையாக அனுமதி வழங்கப்படும் நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் இவ்விவகாரம் தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி சென்னை மாநகராட்சி காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x