Published : 06 Sep 2018 08:09 AM
Last Updated : 06 Sep 2018 08:09 AM

பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு: பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்

பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு இந்த ஆண்டு முதல் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகள் அதிகமானோர் விண்ணப்பிக்க முடியும்.

பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவ - மாணவிகள் உயர் கல்விக்குச் செல்வதை ஊக்குவிக் கும் வண்ணம் மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், பிளஸ் 2 முடித்துவிட்டு மேற்படிப்புக்காக கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவ - மாணவி களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை (Central Sector Scheme of Scholarship for College and University Students) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தேசிய அளவில் 82 ஆயிரம் பேர் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 41 ஆயிரம் பேர் மாணவர்களாகவும் 41 ஆயிரம் பேர் மாணவிகளாகவும் இருப்பார்கள்.

தமிழகத்தில் 4,883 பேர்

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத்திட்டம் என ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை ஒதுக்கப்படுகிறது. அதன்படி, சிபிஎஸ்இ மாணவர்கள் 5,413 பேரும் ஐசிஎஸ்இ மாணவர்கள் 577 பேரும் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 76.010 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மாநில பாடத்திட்டத்தைப் பொருத்த வரையில் ஒவ்வொரு மாநிலத்துக் கும் குறிப்பிட்ட எண்ணிக்கை ஒதுக்கீடு செய்கிறார்கள். அதன்படி, தமிழ்நாட்டில் 4,883 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஒட்டுமொத்த எண்ணிக்கையில் எஸ்சி வகுப்பினருக்கு 15 சதவீதமும் எஸ்டி வகுப்பினருக்கு 7.5 சதவீதமும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு கலை அறிவியல் படிப்பிலோ, பொறியியல், மருத் துவம் உள்ளிட்ட தொழில்படிப்பிலோ முதல் ஆண்டு படிப்பவராக இருக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுவோருக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளங்கலை படிப்பை முடித்த பின்னர் முதுகலை படித்தால் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். பிளஸ்-2-வுக்குப் பிறகு ஒருங்கிணைந்த முதுகலை பட்டப் படிப்பாக இருப்பின் முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரமும் (ஆண்டுக்கு) 4-வது, 5-வது ஆண்டுக்கு தலா ரூ.20 ஆயிரமும் பெறலாம். மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தை (www.scholarships.gov.in) பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜுன், ஜூலை மாதத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவரையில், இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கான குடும்ப வருமான உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக இருந்து வந்தது. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டு (2018-19) முதல் வருமான உச்சவரம்பை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச் சகத்தின் உயர்கல்வித்துறை செயலாளர் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில அரசுகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் அதிகமான மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x