Published : 28 Sep 2018 12:58 PM
Last Updated : 28 Sep 2018 12:58 PM

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை: வைதீகம் இறந்தது; கி.வீரமணி வரவேற்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு வரவேற்றுப் பாராட்டத்தக்க ஒன்றாகும். ஆண் - பெண் பாலின வேறுபாடு கூடாது என்ற அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளைச் சரியாகப் பாதுகாத்த ஒரு வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பே இது.

சனாதனம் அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டதல்ல!

சனாதனம் என்பது அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல; இந்திய அரசியல் சட்டத்திற்கும், அதன் உரிமைகளுக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். மேலும் மாதவிடாய் என்பது பெண்கள் உடலின் ஒரு இயற்கை நிகழ்வு, வியர்வை வெளிப்படுவதுபோல; இதைத் தீட்டு என்று கூறுவது அறிவியல் உடலியல் பற்றிய அறிவுக்குறைபாடேயாகும்.

எனவே, அந்தக் காரணத்தைக் காட்டுவது, வயதுள்ள பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல உரிமை மறுக்கப்படுவது, மனித உரிமைக் கோணத்தில் மாபெரும் தவறான நடவடிக்கையே. இதை மாற்றிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியான தீர்வே.

இறந்தது வைதீகம்!

கேரளத்தில் பகவதியம்மனுக்கு மாதவிடாய் வைத்தே திருவிழாவும், வழிபாடும் உண்டு. பின் இங்கு மட்டும் ஏன் தடை? வைதீகம் இறந்தது” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x