Published : 05 Sep 2018 08:05 PM
Last Updated : 05 Sep 2018 08:05 PM

குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ரஜினி ஆறுதல்

 

குன்றத்தூரில் ஆண் நண்பருடன் வாழ்வதற்காக தனது இரண்டுக் குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவர் தீவிர ரஜினி ரசிகர். அவரது நிலையை கண்ட ரஜினி அவரை அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் வசிப்பவர் விஜய் (34). வங்கியில் பணியாற்றுகிறார். இவரது மனைவி அபிராமி (28). இவர்களுக்கு அஜய் (5), காருண்யா (4) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜய்யும் அபிராமியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.

காதலித்துத் திருமணம் செய்தாலும் பெற்றோர்கள் ஏற்று சந்தோஷமாக வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. வங்கியில் வேலை, கை நிறைய சம்பளம், திருமண வாழ்க்கையின் அர்த்தமாக இரண்டு அழகான குழந்தைகள். விஜய் - அபிராமி தம்பதியைப் பார்த்து பெற்றோர், அக்கம் பக்கத்தினர் சந்தோஷப்பட்டனர்.

வழக்கமாக சிறிய வயதில் தம்பதியினரிடையே வரும் முட்டல் மோதல் பூசல்கள் விஜய்- அபிராமிக்கும் வந்துள்ளன. சாதாரணமாக கடக்கவேண்டிய வாழ்க்கை நிகழ்வில் பிரியாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரத்தின் குறுக்கீடு அபிராமியின் வாழ்க்கையை மாற்றியது.

அபிராமிக்கு ஆதரவாக சுந்தரம் பேசி விஜய்யை அவர் வெறுக்கும் அளவுக்கு மாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் கணவர் விஜய் மீது அருவருப்பு உண்டாக அபிராமி ஒதுங்கியுள்ளார்.

ஒருகட்டத்தில் பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் செல்வதற்காக தடையாக இருந்த இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் வைத்து கொன்றார் அபிராமி. தமிழகத்தையே உலுக்கிய அபிராமியின் வழக்கில் அவரது செயலை வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எந்த தாயும் செய்யத்துணியாத செயலை செய்த அபிராமியின் செயலால் அவரது கணவர் விஜய் தனது இரண்டு குழந்தைகளையும் இழந்து நிற்கிறார்.

விஜய் தீவிர ரஜினி ரசிகர். அவரது குழந்தைகளும் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில் தனது ரசிகரின் குழந்தைகள்தான் கொல்லப்பட்டது என்பது குறித்து அறிந்த ரஜினி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விஜயை தனது வீட்டுக்கு அழைத்து வரச்சொன்னார்.

வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட ரசிகர் விஜயை கட்டியணைத்து ரஜினி ஆறுதல் கூறினார். ரஜினியை பார்த்ததும் விஜய் கதறி அழுதார். அதைப்பார்த்த ரஜினி வருத்தத்துடன் அவரைத்தேற்றினார். அவரது குடும்ப விபரங்களை கேட்டார். பின்னர் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூறி ஆறுதல் தெரிவித்தார்.

இதேபோன்று . 'காலா' இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்த மதுரையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்ற ரசிகர் திரும்பி சொந்த ஊருக்குச் செல்லும்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் படிக்கட்டில் அமர்ந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது மறைமலை நகர் ரயில் நிலையம் வரும்போது ரயில் பிளாட்பாரத்தில் காசி விஸ்வநாதனின் கால் உரசி இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்து அவரது இரண்டு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் மதுரை ரசிகர் காசிவிஸ்வநாதன் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது ரஜினியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. உடனடியாக ரஜினி தனது ரசிகர் சிகிச்சைக்கான முழுச்செலவையும் ஏற்பதாக அறிவித்தார். மேலும் காசி விஸ்வநாதன் குணமான பிறகும் தேவையான உதவிகளை வழங்குவதாக அறிவித்திருந்தார்.

அவரது குழந்தைகளின் கல்விச்செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் பூரண குணமடைந்த காசி விஸ்வநாதனை தனது இல்லத்துக்கு இன்று அழைத்த ரஜினி அவரிடம் நலம் விசாரித்தார். தேவைப்பட்ட உதவிகளை தயங்காமல் கேட்கும்படி கூறி வழி அனுப்பி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x