Published : 12 Sep 2018 03:24 PM
Last Updated : 12 Sep 2018 03:24 PM

‘நான் வருமான வரித்துறை அதிகாரி பேசுகிறேன்’: கோட்டூர்புரத்தில் தொலைக்காட்சி ஊழியரிடம் வங்கி தகவல்களை வாங்கி ரூ. 7 லட்சம் சுருட்டல்

வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி தொலைக்காட்சி நிறுவன ஊழியரிடம் வங்கிக் கணக்கு விபரங்களை பெற்று ரூ. 7 லட்சத்தை சுருட்டிய மர்ம நபர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்தவர் ஹென்றி பிளாசிக் குமார் (52) பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்னை பெசன்ட்நகர் எச்டிஎப்சி வங்கியில் கணக்கு இருக்கிறது.

இந்நிலையில் நேற்றிரவு இவரது கைப்பேசிக்கு வருமான வரித்துறையிலிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து பேசுகிறோம் என்று எதிர்முனையில் பேசியவர்கள் அதிகாரமாக கூறியுள்ளனர். இதனால ஹென்றி பதற்றமடைந்துள்ளார்.

பின்னர் அவரிடம் வருமான வரி சம்பந்தமாக தகவல்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதிலளித்துள்ளார். பல கேள்விகளை கேட்டுக்கொண்டே இடையில் அவரது வங்கிக்கணக்கு எண், வீட்டிலுள்ளவர்கள் வங்கிக்கணக்கு எண்களை கேட்டுள்ளனர்.

அவரும் வருமான வரித்துறைத்தானே என்று அவர்கள் கேட்ட விபரங்களை அளித்துள்ளார். பின்னர் அவர்கள் அவர்கள் விசாரித்த தகவல்களை சரி பார்க்கிறோம் என்று கூறி வங்கிக்கணக்கு குறித்த மேலும் பல தகவல்களை கேட்டு வாங்கியுள்ளனர்.

அவர் பதிவு செய்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கு மற்றும் மனைவி மகள் வங்கிக்கணக்கிலிருந்து சுமார் ரூ.7 லட்சம் வரை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். தனது வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுவதாக வந்த மெசேஜ் வந்துள்ளதை பார்த்து திடுக்கிட்டுப்போன அவர் உடனடியாக தனது அக்கவுண்டை சோதித்தபோது அவரது அக்கவுண்ட் மற்றும் மனைவி, மகள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக இதுகுறித்து அவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பேசிய செல்போன் எண்களை ஆராய்ந்து வருகின்றனர். இந்த வழக்கில் இணையதளம் மூலம் குற்றம் நடந்துள்ளதால் சைபர் பிரிவுக்கு வழக்கு மாற்றப்படும் என தெரிகிறது.

வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் உள்ள இணையதள மோசடி நபர்கள் அங்கிருந்துக்கொண்டே இதுபோன்ற மோசடி செய்யும் கும்பல் வங்கிகள் மெசேஜ் அனுப்புவதுபோல், செல்போன் நிறுவனங்கள் மெசேஜ் அனுப்புவதுபோல், வருமான வரித்துறை, ஆதார் மையம் அனுப்புவது போன்று பதிவேற்றத்தை பயன்படுத்தி அதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை சில நொடிகளில் எடுத்து விடுகின்றனர். அவர்கள் குறித்த புகார் அளித்தாலும் போலீஸார் அவர்களை பிடிக்க முடியவில்லை.

அல்லது போலீஸாருக்கு இருக்கும் சிறிய வசதிகளை பயன்படுத்தி அவர்களை நெருங்க முடியவில்லை. காரணம் அவர்கள் வெளிநாடுகளில் அல்லது வெளிமாநிலங்களில் ஒளிந்திருந்து இந்த செயலை செய்கின்றனர். தற்போதுவரை நான் பேங்க் மேனேஜர் மணிக்குமார் பேசுகிறேன், உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் செய்திருக்கு ஓப்பன் பண்ணனுமா? வேண்டாமா? என்று கேட்டு ஏமாற்றும் நபர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்.

5 காவல் ஆணையர்கள் சென்னையில் மாறிய பின்னரும், பல டிஜிபிக்கள் தமிழக்தில் மாறியபின்னரும், தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளையே ஏமாற்றியுள்ள மணிக்குமார் மட்டும் மாயக்குமாராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x