Published : 20 Sep 2018 03:02 PM
Last Updated : 20 Sep 2018 03:02 PM

2-வது திருமணம் செய்து 7 ஆண்டுகள் திமுக பெண் பிரமுகருடன் குடும்பம் நடத்தி ஏமாற்றிய எஸ்.ஐ சஸ்பெண்ட்: கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு

கணவரை விட்டுத் தன்னையும் தன் பிள்ளைகளையும் பிரித்து அழைத்து வந்து 7 ஆண்டுகள் குடித்தனம் நடத்திய பின் ஏமாற்றி, பணம் நகைகளைப் பிடுங்கி மோசடியில் ஈடுபட்டதாக திமுக பெண் பிரமுகர் அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (44). புளியந்தோப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றினார்.

அப்போது எம்.எல்.ஏ சீட்டு கேட்டு அறிவாலயத்துக்கு வந்த ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் செந்தாமரை (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமில்லை, மனைவி சரியில்லை என்று கூறி செந்தாமரையின் இரக்கத்தை எஸ்.ஐ. சந்தோஷ் குமார் சம்பாதித்துள்ளார்.

நாளடைவில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் நெருக்கமானது. செந்தாமரையின் கணவருக்கும், செந்தாமரைக்கும் உள்ள குடும்பச் சண்டையை பயன்படுத்தி அவரை விட்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வைத்து பின்னர் செந்தாமரைக்குத் தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார். செந்தாமரையையும் அவரது மகன் மற்றும் மகளையும் சென்னை அழைத்து வந்து பள்ளிக்கரணையில் தங்க வைத்து எஸ்.ஐ. குடும்பம் நடத்தியுள்ளார்.

இப்படியே பல ஆண்டுகள் ஓடின. செந்தாமரைக்கும் அவரது முதல் கணவருக்கும் டைவர்ஸ் லேட்டானதால் எஸ்.ஐ. சந்தோஷ் குமாருடன் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக 40 சவரன் வரையில் நகைகளும், 10 லட்சத்துக்கு மேல் பணத்தையும் பெற்று ஏமாற்றிய சந்தோஷ் குமாருக்கு பல பெண்களிடம் தொடர்பு இருந்துள்ளது.

இதுகுறித்து செந்தாமரை சந்தேகப்பட்டு கேட்டபோது கோபத்தில் மிரட்டிவிட்டு கடந்த ஜூன் 5-ம் தேதி வீட்டிலிருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் பணம் மற்றும் 6 சவரன் தங்க நகைகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தாமரை இதுகுறித்துப் புகார் அளிக்க முயன்றபோது கடந்த ஜூன் 17-ம் தேதி செந்தாமரையை அழைத்து கொலை செய்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதன்பின்னர் செந்தாமரை மேற்கண்ட தகவல்களைப் புகாராக கடந்த 8-ம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அளித்தன்பேரில் போலீஸார் தலைமறைவாக இருக்கும் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் மீது ஐபிசி பிரிவு 417, 406, 380, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மோசடி, பணம் நகை பறிப்பு போன்ற புகாரில் சிக்கி தலைமறைவாக இருக்கும் எஸ்.ஐ சந்தோஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x