

லஞ்சம் வாங்கி கைதான கள்ளக் குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கர்களில் இருந்து இதுவரை 13 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடலூர் செம்மண்டலம் தவுலத் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு(55). இவர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 11-ம் தேதி சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீஸார் அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த செந்தில்குமார் என்பவரும் கைதானார்.
இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அங்கு, ரூ.30 லட்சம் பணம், 200 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், கடந்த 19-ம் தேதி கடலூ ரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாபுவின் பெயரில் உள்ள 3 வங்கி லாக்கர்களில் இருந்து 10 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின. கடந்த 24-ம் தேதி, 2-வது முறையாக கடலூர் செம்மண்டலத் தில் உள்ள ஒரு தேசிய மயமாக் கப்பட்ட வங்கியில் பாபுவின் 2 லாக்கர்களில் இருந்து 500 கிராம் தங்க நகைகள், பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், கடலூர் மஞ்சக் குப்பம் விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் வங்கியில் உள்ள பாபுவின் லாக்கரில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸார், நேற்று 3.5 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து நகைகள் மதிப்பிடப்பட்டு லாக்க ரில் வைத்து பூட்டி சீல் வைக்கப் பட்டன.
பாபுவின் 7 வங்கி லாக்கர்களில் இருந்து 13 கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி, வைர நகைகள் வாங்கிய ஆவணங்கள், ரூ.10 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங் கள் பறிமுதல் செய்யப்பட்டிருக் கின்றன. ரூ.30 லட்சம் ரொக்கம் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. பாபுவின் பெயரில் உள்ள 45 வங்கி கணக்குகளில் உள்ள தொகை குறித்து தெரிவிக்க வங்கிகளுக்கு கடிதம் அனுப்பப்பட் டுள்ளதாக போலீஸார் கூறினர்.