Published : 23 Sep 2018 08:31 AM
Last Updated : 23 Sep 2018 08:31 AM

யார் குறை கூறினாலும் மக்கள் பணி தொடரும்: நாகர்கோவிலில் முதல்வர் கே.பழனிசாமி உறுதி

``யார் குறைகூறினாலும், மக்களுக் கான பணிகளை அரசு தொடர்ந்து செய்யும்” என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விஜயகுமார் எம்.பி., மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மகளிர் சுயஉதவி குழுக்கள் உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, ரூ.67 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியபோது தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து குறுகிய காலத்தில் இயல்பு நிலை திரும்பச் செய்தது. காணாமல் போகும் மீனவர்களைக் மீட்பதற்காக கன்னியாகுமரியில் இந்திய கடலோர காவல் படை சார்பில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மின்சாரம் போன்ற துறைகள் நாட்டிலேயே சிறப்பாக செயல்பட்டமைக்காக, மத்திய அரசின் தேசிய விருதுகளை தொடர்ந்து பெற்று வருகின்றன.

ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்

ஆனால், அரசின் மீது சிலர் குறை கூறி தேவையில்லாத சவால்களை விடுக்கின்றனர். வேண்டுமென்றே அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். மைக் கிடைத்தால் போதும், அதிமுக அரசு மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதே அவரது வேலையாகிவிட்டது. பொய் கூறுவதில் டாக்டர் பட்டம் கொடுத்தால் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்.

தமிழகத்தை முதன்மை மாநில மாக மாற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் இரவு பகலாக பாடுபட்டு வரு கிறது. 50 ஆண்டுகளாக இருந்த காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப் பட்டுள்ளது. டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் 2019 ஜனவரி மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறையில் பல சாதனைகளை அரசு செய்து வருகிறது. விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய்க்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பயிர் கடன் வழங்கப்படுகிறது. குடிமராமத்து பணிகள் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது.

புதிதாக 75 தடுப்பணைகள்

தமிழகத்தில் புதிதாக 75 தடுப்பணைகள், 7 அணைக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. மழைநீரை வீணாகாமல் சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற பொறியாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படவுள்ளது.

இந்த குழு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று எங்கெங்கு தடுப்பணைகள் தேவை, எந்தெந்த குளங்கள், ஏரிகளை தூர்வார வேண்டும் என ஆய்வு செய்து. அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும்.

டெல்டா மாவட்டங்களுக்கு என தனியாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி, இணைச் செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கடைமடை வரை தண்ணீர் செல்ல அவர், நடவடிக்கை எடுப்பார்.

இதுபோன்ற திட்டங்கள், சாதனைகள் எதையும் படிக்காமல், யாரோ எழுதித்தரும் அறிக்கையை வைத்துக்கொண்டு, அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் குற்றம்சாட்டி வருகிறார்.

யார் குறைகூறினாலும், மக்களுக்கான பணிகளை அரசு தொடர்ந்து செய்யும் என்றார் முதல்வர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x