

தமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் தொடர்பான வழக்கில், தேர்வில் தோல்வியடைந்தவர் சார்பில் நீதிமன்றத்தையே குறைகூறி மனு தாக்கல் செய்ததால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, போலீஸ் டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 91 காலியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இதில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்ட 83 பேர் தேர்வு விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது.
தேர்வில் தோல்வியடைந்தவர் கள் தொடர்ந்த மனுவை விசா ரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், 83 பேர் குரூப் 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப் பட்டதை ரத்து செய்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவில் மாற்றம் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் அனில் தவே, தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தேர்வில் தோல்வி யடைந்த மாதவன் என்பவர் தொடர்ந்த மனுவில், ‘நீதிமன்றத் தின் முடிவில் மாற்றம் ஏற்பட் டுள்ளதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டதுடன், தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி உள்ளிட்டோர் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த நீதிபதி தீபக் மிஸ்ரா, மனு தாக்கல் செய்த மாதவனை அழைத்து, ‘உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இதுபோன்று மனு தாக்கல் செய்வீர்கள்?’ என்று கேட்டார். ‘வேலை கிடைக்காத விரக்தியில் தாக்கல் செய்து விட்டேன்’ என்று அவர் பதில் அளித்தார்.
‘விரக்தி ஏற்பட்டால் என்ன வேண்டுமானாலும் குற்றச்சாட்டு தெரிவிப்பதா?’ என்று கேட்ட நீதிபதி, உடனே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்வதுடன், இம்மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கின் அடுத்த விசார ணையை நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.