Published : 21 Sep 2018 11:36 AM
Last Updated : 21 Sep 2018 11:36 AM

வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் முக்கியம்: சென்னையில் போலீஸார் கடும் சோதனை

 ஹெல்மெட் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சென்னை முழுவதும் போலீஸார் கடும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவதையும், சீட் பெல்ட் போடுவதையும் உறுதி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் நேற்று கண்டிப்புடன் உத்தரவிட்டது.

மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை, ஆகவே அதை முழுமையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது. இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு கட்டாய ஹெல்மெட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த மூன்றாண்டுகளாக எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

நேற்று இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் ‘‘அமர்வு கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அது குறித்த விழிப்புணர்வை அரசு கட்டாயம் மக்களிடையே கொண்டுச்செல்ல வேண்டும்.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிற விதிகளையும், ஹெல்மெட் அணிவதன் மூலமாக ஏற்படும் நன்மைகள் குறித்தும், சாலை விபத்தில் ஏற்படுகிற உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு கட்டாய ஹெல்மெட் அணியும் உத்தரவை செயல்படுத்த வேண்டும், இதனை கண்டிப்புடன் அரசு செயல்படுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

ஒரு மாதம் கழித்து அக்டோபர் 23 அன்று அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர். கட்டாய ஹெல்மட் என்பது உயிர்காக்கும் ஒரு கவசம் என்பதால் நீதிமன்றம் இதில் உறுதியாக உள்ளது. இதனால் உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடுமை காட்டி வருகிறது.

உயர் நீதிமன்றம் கடுமையாக தமிழக அரசை கண்டித்த நிலையில் கட்டாய ஹெல்மட் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஹெல்மட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x