Published : 15 Sep 2018 07:50 AM
Last Updated : 15 Sep 2018 07:50 AM

புழல் சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தபடி  வாட்ஸ்அப் மூலம் வெளிநாட்டுக்கு பேசிய தீவிரவாதிகள்: பின்னணியில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் பட்டியல் தயாரிப்பு

புழல் சிறையில் இருந்தவாறு சில கைதிகள் மலேசியா, வங்காள தேசம் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு நவீன செல்போன் மூலம் வாட்ஸ்அப் காலில் தனது கூட்டாளிகளுடன் பேசியதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் பற்றிய பட்டியலும் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை புழல் மத்திய சிறையில் கள்ளத் துப்பாக்கி வழக்கில் சிக்கியவர்கள், போதைப் பொருள் கடத்தியவர்கள், கொலை குற்றவாளிகள், முக்கிய தலைவர்களைக் கொன்றவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் புழல் சிறைக்குள்ளேயே சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக விலை உயர்ந்த செல்போன்கள், சொகுசு அறை, கட்டில், மெத்தை, பல வண்ண ஆடை, வகை வகையான உணவு வகைகள், அதை தயாரிக்க, பாதுகாப்பாக வைக்க தேவையான உபகரணங்கள் உள் ளிட்டவைகளைப் பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை உண்மை என நிரூபிக்கும் வகையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சில குற்ற வாளிகள் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சில அதிதீவிர குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிறைக்குள் இருந்தாலும் தங்களது பணப்பலத்தைப் பயன்படுத்தி ஆடம்பர வசதியை சிறையில் அனுபவித்து வந்ததாக சிறையில் இருந்து வெளியே வந்த சக கைதிகள் குற்றம் சாட்டினர்.

சிறையில் இருந்தவாறு சில தீவிரவாதிகள் வங்கதேசம், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அதிக முறை செல்போன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் கால் மூலம் 100-க்கும் மேற்பட்ட முறைகள் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் கஞ்சா கடத்தல் மற்றும் கள்ள நோட்டுகள் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களைத் தற்போது உளவு பிரிவு போலீஸார் சேகரித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாகவே சில தினங்களுக்கு முன்னர் 20-க்கும் மேற்பட்ட செல்போன் களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

வெளிநாடுகளுக்கு வாட்ஸ்அப் காலில் அதிக முறை பேசியது இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் அவரது கூட்டாளியும் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நவீன செல்போன் மூலம் வங்கதேசத்தில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பலிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் உண்மை தன்மை குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இது மட்டும் அல்லாமல் சிறையில் இருந்தபடியே சிலர் கஞ்சா கடத்தல்களைப் பல நூறு கோடி ரூபாய்க்கு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் உளவுத்துறை போலீஸார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் புழல் சிறைக்குள் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 20 டிவிக்கள், 6 டிவிடிக்கள், 40 ரேடியோக்கள், 4 மிக்ஸிக்கள், 7 ஜுஸர்கள், 10 மைக்ரோவேவ் அவன்கள், 5 மின்சார அடுப்புகள், 100 கிலோவுக்கு மேல் பிரியாணி செய்ய பயன்படுத்தப்படும் பாசுமதி அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விதிகளை மீறி சிறைக்குள் அவர்களுக்கான சொகுசுப் பொருட்களை அனுமதித்தது யார், அதற்கு கைமாறாக என்ன வழங்கப்பட்டது என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் பற்றிய பட்டியலும் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதுபோல் தற்போது புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x