Published : 14 Sep 2018 01:13 PM
Last Updated : 14 Sep 2018 01:13 PM

திமுகவில் இணைக்க மறுப்பது குறித்து ஸ்டாலினிடம் கேளுங்கள்: அழகிரி காட்டம்

திமுகவில் சேர தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அழகிரி, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள், ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று காட்டமுடன் தெரிவித்தார்.

திமுகவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அழகிரி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

"திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத் தலைமையையும் - கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் திமுகவிலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்" என அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

அந்த தருணத்தில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, தானும் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனும் ஆலோசித்து அழகிரியைக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அழகிரி பேட்டி அளித்திருந்தார். அதில் பெரும்பாலும் ஸ்டாலின் எதிர்ப்பே அதிகம் இருந்தது. அதன் பின்னர் 2016-ல் கருணாநிதி தீவிர அரசியலிலிருந்து வயோதிகம் காரணமாக ஒதுங்கி ஓய்வெடுத்தபோது நேரில் வந்து சந்தித்தார்.

பின்னர் கருணாநிதி காலம் வரை திமுகவுக்குள் எந்தக் குழப்பமும் ஏற்படுத்தக்கூடாது எனக் கூறியிருந்தார். ஓய்வில் இருந்த கருணாநிதி தீவிர அரசியலுக்குத் திரும்பாமல் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். இந்த இடைவெளியில் ஸ்டாலின் திமுகவுக்குள் வலுவாகக் காலூன்றினார்.

கருணாநிதி மறைவுக்குப் பின் திமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பதுபோன்று காண்பித்த அழகிரி நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்பதை விமர்சித்தார். இந்நிலையில் ஸ்டாலின் திமுக தலைவரானார்.

திமுகவில் தன்னைச் சேர்ப்பார்கள் என அழகிரி காத்திருக்க, ஸ்டாலின் வாயே திறக்காமல் இரண்டாம் கட்டத் தலைவர்களைப் பேச வைக்கிறார். இதனிடையே தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கில்லை என அழகிரி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

திமுகவில் அழகிரிக்கான வாய்ப்பு குறைந்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கூறிவரும் நிலையில் அழகிரி மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அழகிரி பதிலளித்தார்.

உங்களுக்கு தொடர்ந்து திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? ஏன்

அது அவரைக் (ஸ்டாலினை) கேட்க வேண்டிய கேள்வி, அங்கே போய் காரணம் கேளுங்கள். அவரைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?

பழனி மாணிக்கம், முல்லை வேந்தன் போன்றோரை சேர்த்துக்கொண்டார்கள். உங்களைமட்டும் ஏன் சேர்க்க மறுக்கிறார்கள்?

பழனி மாணிக்கத்தை எப்போது நீக்கினார்கள்.

தேர்தல் தோல்வியில் நீக்கப்பட்டு பின்னர் கடிதம் கொடுத்து சேர்த்துக்கொண்டார்களே?

அதைத்தான் நானும் சொல்கிறேன். என்னை ஏன் சேர்க்கவில்லை, இதுபோன்ற கேள்விகளை அவரைப் போய் கேளுங்கள். அங்கு கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.

இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x