Published : 07 Sep 2018 01:15 PM
Last Updated : 07 Sep 2018 01:15 PM

வேலூர் அருகே பிளஸ் 1 மாணவர் தற்கொலை: ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் கேள்வி கேட்டு அடிப்பதாக கடிதம்

 வேலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 1 மாணவர், தன்னுடைய தற்கொலை கடிதத்தில் ஆசிரியர்களை குற்றம்சாட்டியுள்ளார். இதனால், அம்மாணவரின் உறவினர்கள் பள்ளியில் திரண்டு ஆசிரியர்களை சரமாரியாக தாக்கினர். பின்னர், மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலூர் அடுத்துள்ள பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பிரசாத் (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 3-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவரின் புத்தகப் பையை அவரது பெற்றோர் வியாழக்கிழமை பார்த்தனர். புத்தகத்தின் நடுவில் இருந்த கடிதத்தை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த கடிதத்தில், “தனது தற்கொலைக்கு ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், கண்ணப்பன், குமார், உடற்கல்வி ஆசிரியர்கள்தான் காரணம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆசிரியர்கள் யாரும் பாடம் நடத்தாமல் கேள்வி கேட்டு அடித்ததால் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பள்ளியில் திரண்டனர். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் இல்லாத நிலையில் கணித ஆசிரியர் கண்ணப்பனை சரமாரியாக தாக்கினர். இந்த தகவலால் வகுப்புகளை புறக்கணித்த மாணவர்களும் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரியல் ஆசிரியர் குமார் ஆய்வக அறையில் மறைந்து கொண்டதால் தப்பினார். உடற்கல்வி ஆசிரியர்கள் இருவரும் அங்கிருந்து தப்பினர். பள்ளியில் போர்க்களம் போல சூழல் ஏற்பட்டதால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வேலூரில் இருந்து காவல் ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான போலீஸார் குவிக்கப்பட்டனர். அதன் பிறகே நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

பின்னர் படுகாயம் அடைந்த ஆசிரியர் கண்ணப்பனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்தப் பிரச்சினை தொடர்பாக வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் புலேந்திரன் விசாரித்து வருகிறார்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறும்போது, “மாணவர் தற்கொலை செய்துகொண்டது மற்றும் அவர் எழுதிவைத்த கடிதம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதன் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, “கணக்கு ஆசிரியர் பாடம் நடத்தும்போது அடிக்கடி கேள்வி கேட்பார். பதில் கூறாவிட்டால் அடிப்பார். உயிரியல் ஆசிரியர் பாடம் நடத்தமாட்டார். பாடத்தை படிக்கும்படி கூறிவிடுவார். படிக்காத மாணவர்களை அடிப்பார். அருண்பிரசாத் நன்றாக படிக்கும் மாணவர்தான். அவர் அடிவாங்கியுள்ளார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x