Published : 10 Sep 2018 08:30 AM
Last Updated : 10 Sep 2018 08:30 AM

புவி வெப்பமயமாதலால் கடலோரங்களில் அமைந்துள்ள  சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து: தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர் எச்சரிக்கை

புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது என தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பாலம் வாசகர் சந்திப்பு கூட்டத்தின் 5-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘இயற்கை பேரிடர்’ என்ற தலைப்பில் வாசகர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் பேசியதாவது:

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர், இடுக்கி அணை நீரால் ஏற்பட்ட சேதம், இயற்கை சீற்றம் என பல்வேறு காரணங்களை கூறுகின் றனர். உண்மையில் அது மனிதர் களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர். 6 மாநிலங்களில் பரவியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழல் பாதுகாப்பு குறித்து அறிவியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு 2011-ல் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில், மேற்கு தொடர்ச்சி மலையை 4 மண்டலங்களாக பிரித்து, அதில் முதல் 3 மண்டலங் களில் குவாரிகளை அனுமதிக்கக் கூடாது, குடியேற்றங்களை அனுமதிக்கக் கூடாது, இயற்கைக்கு எதிரான எந்த செயல் திட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியது. ஆனால், கேரள, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் அதை ஏற்க மறுத்தன. இதன் விளைவுதான் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு. இதேபோன்ற பேரிடர் ஆபத்து கோவா மாநிலத் துக்கும் உள்ளது என மாதவ் காட்கில் எச்சரித்துள்ளார்.

இந்தியாவிலேயே சென்னை நகரில்தான் வெள்ள நீர் விரைவாக வெளியேற வடிகால் வசதி உள்ளது. வட சென்னையில் கொசஸ்தலை, தென் சென்னையில் அடையாறு, மத்திய சென்னையில் கூவம் என ஆறுகளும், 16 பெரிய நீரோடை களும் உள்ளன. இருந்தும் 2015-ல் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் அவற்றை முறையாக பராமரிக்காததுதான்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகள் யாவும் நீர்தேங் கும் இடமாகும்.

அதேபோல், அந்தந்த பகுதிக்கு ஏற்ற மரங் களை நாம் நட்டு வளர்க்க வேண் டும். சென்னையில் வார்தா புயலின் போது, வேரோடு சாய்ந்த மரங்கள் யாவும் வெளிநாட்டு வகை மரங் கள், ஆனால், நம் நாட்டு இனங்க ளான வேம்பு, அரசு உள்ளிட்ட மரங்கள் ஒன்றுகூட விழவில்லை.

குவாரிக்காகவோ அல்லது நியூட்ரினோ போன்ற திட்டங்களுக் காகவோ பாறையை உடைக்கும் போது அல்லது குடையும்போது அந்த பாறையோடு இணைந்த உறுதியான மண் பிணைப்பு நெகிழ்ந்துவிடும். இது மழைக் காலத்தில் நிலச்சரிவை ஏற்படுத் தும். நிலத்தடியில் இருந்து மீத்தேனை எடுக்கும்போது, மீத்தேனுடன் நிலக்கரி, பாறைகள், தண்ணீர் ஆகியவற்றை வெளி யேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நிலத்தின் உட்பகுதியில் வெற்றிடம் ஏற்படும்.

புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது. இதில், நாகை மாவட்டத்துக்கு பெரும் ஆபத்து உள்ள நிலையில், அங்கு மீத்தேன் எடுத்தால், நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நிலமட்டம் தாழ்ந்து போகும். அதனால், கடல் நீர் எளிதில் உட்புகும். எனவே, இயற்கையின் சமநிலையை நாம் எப்போதும் சீர்குலைக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x