Published : 26 Sep 2018 12:59 PM
Last Updated : 26 Sep 2018 12:59 PM

புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடு நாங்கள் தோண்டப்போகிறோம்: ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முகாந்திரம் இருந்தால் விசாரிக்க உயர் நீதிமன்றம் கூறியுள்ளதால் அதை தோண்டப்போவதாக சேலம் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

புதிய தலைமைச் செயலகத்தை கடந்த 2006-11 திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கட்டினார். அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா புதிய தலைமைச்செயலகத்தை மாற்றி பழைய தலைமைச்செயலகத்திலேயே செயல்பட வைத்தார். புதிய தலைமைச்செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார்.

மேலும் தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்தார். நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.

பின்னர் விசாரணை கமிஷன் பெயரால் கால தாமதம் ஏற்படுகிறது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மூகாந்திரம் இருந்தால் விசாரிக்கலாம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதால் அந்த விவகாரத்தை தோண்டி எடுக்கப்போவதாக நேற்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.

ஸ்டாலினை ஒருமையில் கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார். அவரது பேச்சின் ஒருபகுதி வருமாறு:

“நீங்கள் தேடி கண்டுபிடித்தாலும் குற்றமே அதிமுக அரசில் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் நீ தோண்ட சொல்லிவிட்டாய், நாங்கள் தோண்டப் போகிறோம். புதிய தலைமைச் செயலகம் கருணாநிதி கட்டினார். அம்மா தான் ஒரு விசாரணை கமிஷனை வைத்திருந்தார், அந்த விசாரணைக் கமிஷனைக்கூட நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

அந்த புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு உள்ள டெண்டரை எடுத்துப் பார்க்கும்பொழுது, 8 பேர் கலந்து கொள்கிறார்கள், அந்த எட்டாவது பேர் 29 சதவீதம் அதிகப்படுத்தி போடுகிறார். அந்த டெண்டரின் மதிப்பு 200 கோடி. மூன்று மாதங்கள் கழித்து 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியை சேர்த்து கட்டவேண்டுமென்று சொல்கிறார்.

முதல் 8 லட்சம் சதுர அடிக்கு 200 கோடியில் 29 சதவீதம் அதிகப்படுத்தி ஒருவருக்கு டெண்டர் கொடுத்துவிட்டார்கள். அவருக்கே மூன்று மாதம் கழித்து, அந்தக் கட்டத்தை 9 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியாக கட்டவேண்டும் என்று சொல்லி, அந்த 200 கோடியை 465 கோடியாக ஆக்கியிருக்கிறார், வசமாக மாட்டப் போகிறீர்கள்.

அம்மா இருக்கும்பொழுது இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று அமைத்த ஆணையத்தை, கருணாநிதி அந்த வழக்கை அந்த ஆணையம் விசாரிக்கக் கூடாது என்று 6 வருடமாக தடையாணை வாங்கி வைத்திருந்தார். இப்பொழுது, முகாந்திரம் இருந்தால் நீங்கள் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது.

விசாரணை கமிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் நீதிமன்றம் புது உத்தரவை போட்டிருக்கிறது. நீங்கள் அதை விசாரியுங்கள், விசாரணையில் அது குற்றம் என்றிருந்தால் அதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள். இனிமேல் தான் தெரியப் போகிறது. நாங்கள் ஒன்றும் செய்யாதபோதே இந்த நோண்டு நோண்டுகிறீர்களே, நீங்கள் இவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கிறீர்களே விடுவார்களா மக்கள்? நான் விட்டாலும் இந்த மக்கள் விடமாட்டார்கள்.” என எடப்பாடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x