Published : 22 Sep 2014 11:25 AM
Last Updated : 22 Sep 2014 11:25 AM
சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் 50 சதவீத தண்டனைக் காலத்தை அனுபவித்திருந்தால் விடுதலை செய்யப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளதைத் தொடர்ந்து, தமிழக சிறைகளில் உள்ள அத்தகைய கைதிகளைக் கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி வெளியிட்ட அந்த உத்தரவு, சிறையில் வாடும் ஏழைக் கைதிகளுக்குப் பெரிதும் உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணையின்போது ஜாமீன் கிடைத்தால், அதற்காகச் செலுத்த வேண்டிய பிணைத் தொகையை செலுத்த சிலரால் முடியாமல் போகிறது. சில நேரங்களில் அவர் களுக்குத் தெரிந்தவர்களும் உத்தரவாதம் தரவேண்டியிருக் கும், அதற்கான தொகை யையும் அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும். போதிய நிதி வசதியில்லாததால் பிணைத் தொகை செலுத்தாமல் அவர்கள் சிறையிலேயே தொடர்ந்து வாட வேண்டியிருக்கும். இதுபோன்ற இன்னல்களைத் தீர்க்கும் நோக்கி லேயே உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவினை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக உள்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “அந்த தீர்ப்பைப் பற்றி கேள்விப் பட்டோம். ஆனால், அது தொடர்பான உத்தரவு இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை,” என்றனர்.
எனினும், தமிழக சிறைகளில் உள்ள அத்தகைய விசாரணைக் கைதிகளை கணக்கெடுக்கும் பணியை சிறைத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழக சிறைத்துறை வட்டாரங்கள், ‘தி இந்து’விடம் தெரிவித்ததாவது:
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அனுபவிக்க வேண்டிய தண்டனைக் காலத்தில் பாதியை வழக்கு விசாரணை தாமதம் காரணமாக சிறையில் கழிக்க நேரும் விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் 436 ஏ-வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத்தான் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த உத்தரவு நீதித் துறையினருக்குத்தான் முதலில் அனுப்பப்படும் என கருதுகிறோம். மாஜிஸ்திரேட்டுகள், செஷன்ஸ் நீதிபதிகள் ஆகியோர் சிறைக்கே சென்று அத்தகைய கைதிகளைக் கண்டறிந்து அவர்களை உடனடி யாக விடுதலை செய்ய நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதே அதற்கு காரணம்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை தங்க வைக்க முடியும். அதில் 300 பெண்களும் அடக்கம். இதில், விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையை எப்போதும் கணக் கில் வைத்ததில்லை. தற்போது, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி யிருப்பதால், அது தொடர்பான உத்தரவு எங்களுக்கு கிடைப்பதற்கு முன்பாகவே, கணக் கெடுப்பினைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டிருக்கிறோம். கொலைக் குற்றத்தைத் தவிர்த்த மற்ற வழக்குகள் தொடர்பாக சிறைகளில் அடைபட்டிருக்கும் விசாரணைக் கைதிகளின் கணக்கெடுப்பு தற்போது நடந்து வருகிறது. அது 5 ஆயிரத்துக்குள்தான் இருக்கும் எனக் கருதுகிறோம்.
சிறைகளில் மாதமொருமுறை நடக்கும் ‘லோக் அதாலத்’-களிலும் விசாரணைக் கைதிகள் தொடர்ந்து விடுதலை செய்யப் பட்டுவருகின்றனர். தனது உத்தரவை 2 மாதங்களுக்குள் நடை முறைப்படுத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதால், அடுத்த மாதத்தில் தமிழக சிறைகளில் இருந்து பல ஆயிரம் கைதிகள் விடுதலையாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு சிறைத்துறையினர் தெரிவித்தனர்.