Published : 17 Sep 2018 12:04 PM
Last Updated : 17 Sep 2018 12:04 PM

ஹெச்.ராஜா கைது செய்யப்படுவாரா?- அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ஹெச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, நீதிமன்றம் மற்றும் காவல் துறை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த வீடியோ, கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், சட்டத்தை மதிக்காமல் நடந்துகொள்ளுதல், இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், திட்டமிட்டு குழு மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நீதிமன்றம் குறித்து தான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என ஹெச்.ராஜா விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று (திங்கள்கிழமை) மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. சாதி, மதம், மொழியின் பெயரால் பிரச்சினை செய்வதை அரசு அனுமதிக்காது. மதக் கலவரத்தைத் தூண்டுபவர்கள் மீது சட்டம் பாயும்.

ஹெச்.ராஜா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஹெச்.ராஜா கைது செய்யப்படுவாரா என்ற நிருபர்கள் கேட்டதற்கு, “உங்கள் ஆசை அதுவென்றால் நடக்கும்” எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x