Published : 21 Sep 2018 10:10 AM
Last Updated : 21 Sep 2018 10:10 AM

ஐஆர்சிடிசி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு: ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கான சேவை கட்டண சலுகை 2019 மார்ச் வரை நீட்டிப்பு; பயணிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக ரயில் பயணிகள் பொது நலச்சங்க செயலர் தகவல்

ரயில் டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான சேவை கட்டண சலுகையை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் வரையில் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சேவை கட்டணத்தை மீண்டும் வசூலிக்க வேண்டுமென்ற ஐஆர்சிடிசியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் இயக்கப்படும் 14,000-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் தினமும் 2 கோடியே 40 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இடைத்தரகர்களை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறி வரும் நிலையில் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 (சிலீப்பர் வகுப்பு) முதல் ரூ.40 வரை (ஏசி வகுப்பு) சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த சேவை கட்டணம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு இந்தச் சலுகை 2018 மார்ச் 31-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.

70 சதவீதம் அதிகரிப்பு

இந்தச் சேவை கட்டணம் மூலம் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதனால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் மொத்த எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இந்த சேவை கட்டணம் ரத்து மூலம் ஆண்டுதோறும் ரயில்வேக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

இதுதொடர்பாக ரயில்வே அதி காரிகளிடம் கேட்டபோது, ‘‘மத்திய அரசு 2016 நவம்பரில் கொண்டு வந்த பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, ரயில் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான சேவை கட்டணத்தை ரத்து செய்தது. இந்தச் சலுகையை 2018 மார்ச் வரையில் ஒரு முறை நீட்டிப்பு செய்தது.

ரூ.500 கோடி இழப்பு

இதனால், ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த தொகையை ரயில்வே துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அல்லது சேவை கட்டணத்தை, வசூலிக்க அனுமதிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வரவில்லை. இதற்கிடையே, சேவை கட்டண சலுகை வரும் 2019 மார்ச் வரையில் நீட்டிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.’’ என்றனர்.

இதுதொடர்பாக திருநின்றவூர் ரயில் பயணிகள் பொது நலச் சங்கத்தின் செயலாளர் எஸ்.முரு கையன் கூறும்போது, ‘‘ரயில்வே யில் சுவிதா, சிறப்பு கட்டணம் போன்ற சிறப்பு ரயில்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால் மக்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சேவை கட்டண சலுகை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது. சேவை கட்டணத்தை நிரந்தரமாகவே ரத்து செய்தால், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x